முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பெற பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களும், கோயில்களில் நேர்த்திக்கடன்கள் செலுத்தி வரும் நிலையில், தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடக் கூடாது என போராட்டம் நடத்திய வாட்டாள் நாகராஜும் சிறப்பு பூஜை செய்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்துக்கு காவிரி நதி நீரை திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டதை அடுத்து கர்நாடகாவில் பெரும் கலவரம் ஏற்பட்டது. கர்நாடகாவில் உள்ள மாண்டியா, பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பல பகுதிகளில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. கலவரத்துக்கு கன்னட அமைப்புகள் காரணம் என்று கூறப்படுகிறது.

வாட்டாள் நாகராஜன் தலைமையில் கூட்டம் கூட்டமாக, தமிழர்கள் உடைமைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தீ வைத்து 

எரிக்கப்பட்டன. கன்னட வாழ் தமிழர்கள் பலரும் தாக்கப்பட்டனர். அது மட்டுமல்லாது முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ பொம்மைகள் எரிக்கவும் செய்தது வாட்டாள் நாகராஜ் குழு.

தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக, அப்போலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பெற பல்வேறு தரப்பினர் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், தமிழகத்துக்கு எதிராக கர்நாடகாவில் கலவரம் ஏற்பட காரணமாவர்களுள் ஒருவரான வாட்டாள் நாகராஜ், முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பெற சிறப்பு பூஜை செய்துள்ளார்.

ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு வாட்டாள் நாகராஜ் மனம் வருந்தியுள்ளதாக தெரிகிறது. தசரா விழாவையொட்டி துர்க்கையம்மன் கோயிலில், வாட்டாள் நாகராஜ், முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் கொடுத்து அவர் பெயருக்கு பரிகார பூஜைகள் செய்துள்ளார். 

வாட்டாள் நாகராஜ் செய்த பரிகார பூஜை குறித்து சில கன்னட அமைப்பினர் சென்று அவரை மிரட்ட, ஆனால் வாட்டாளோ என்ன இருந்தாலும் நம்ம மாநிலத்த சேர்ந்தவங்க... உடல் நலம் சரியில்லாதபோது நாம் தானே பூஜை செய்ய வேண்டும் என்றும் சமாதானம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.