கன்னியாகுமரி  நாடாளுமன்றத் தொகுதி எம்.பி.யாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார் இருந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 28 அன்று உயிரிழந்தார். இதனையடுத்து கன்னியாகுமரி தொகுதி எம்.பி. பதவி காலியானது என்று மக்களவை செயலகம் அறிவித்தது. இதுதொடர்பான விவரத்தை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு மத்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி தெரியப்படுத்தியுள்ளார். 
தேர்தல் விதிமுறைகளின்படி உறுப்பினர் மறைந்த நாள் முதல் தொகுதி காலியாக உள்ளதாக கருதப்படும். அன்றைய தேதி முதல் 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி. அதன்படி பிப்ரவரி 28-ம் தேதிக்குள் கன்னியாகுமரி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும். ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் நடைபெற வேண்டிய இடைத்தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. 
அதேவேளையில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்பட வேண்டும். எனவே, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக கன்னியாகுமரியில் இடைத்தேர்தல் நடக்குமா அல்லது சட்டப்பேரவைத் தேர்தலுடன் சேர்ந்து இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த் நிறுத்தப்பட வேண்டும் என்று வசந்தகுமாரின் ஆதரவாளர்களும் உள்ளூரைச் சேர்ந்தவர்களும் வலியுறுத்திவருகிறார்கள்.


இதற்கிடையே தேர்தலில் நிற்பது குறித்து விஜய் வசந்த் கருத்து தெரிவித்துள்ளார். “அரசியலில் எனக்கு விருப்பம் உள்ளது. நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என அப்பாவின் நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் நான். கட்சி தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி நடப்பேன்” என்று விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.