கொரோனாவால் பாதிக்ப்பட்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யுமான எச்.வசந்தகுமார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா வைரஸ் தாக்கத்தால் அவருடைய நுரையீரலில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. வெண்டிலேட்ட மூலம் வசந்தகுமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. ஆனால், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் கவலைக்கிடமாகவே இருந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வசந்தகுமார் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.


மரணமடைவதற்கு முன்பாக அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு கொரோனா இல்லை என்பது தெரிய வந்ததால், அவருடைய உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவருடைய வீட்டில் வசந்தகுமார் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு நேற்று வைக்கப்பட்டது. பிறகு அவருடைய உடலை அடக்கம் செய்வதற்காக சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் இன்று பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, பிறகு உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
அகஸ்தீஸ்வரத்தில் உள்ள வசந்தகுமாரின் பெற்றோர் நினைவிடம் அருகே உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இறுதி சடங்கு நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.