அதிமுக கூட்டணியில் தேமுதிகவைப் போல தமாகவும் கூடுதல் தொகுதி கேட்டு அடம் பிடித்துவருகிறது.
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, என்.ஆர். காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி போன்ற கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தபோதும் இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை. இதேபோல தமாகாவுடனும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. கூட்டணி அமைந்த பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் தேர்தல் பிரசாரக் கூட்டம் வண்டலுாரில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் கூட்டணி கட்சிகளை மேடையேற்ற அதிமுக திட்டமிட்டிருந்தது. இதன் காரணமாக தமாகா தலைவர் ஜி.கே. வாசன் புகைப்படமும் மேடையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால். தொகுதி உடன்பாடு ஏற்படாமல் தன்னால் வர முடியாது என ஜி.கே.வாசன் அதிரடியாகதெரிவித்துவிட்டதால், மேடையில் அவரது படம் அகற்றப்பட்டது.
அதிமுக கூட்டணியில் இணைய கூடுதல் தொகுதிகளை விஜயகாந்த் கேட்பதுபோல, வாசனும் கூடுதலாக கேட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதையும் மாநிலங்களவை பதவியையும் வாசன் கேட்கிறார். 2+1 என கொடுத்தால் தொகுதிகள் கொடுத்தால், கூட்டணியில் இணைய வாசன் காத்திருக்கிறார். ஆனால், அதிமுக தரப்போ, ஒரு தொகுதி மட்டும் தருவதாக வாசனிடம் தெரிவித்துவிட்டது. இதனால், அதிமுக - தமாகா தொகுதி உடன்பாடு நடைபெறுவதில் சிக்கல் இருந்துவருகிறது. ஏற்கனவே பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை பதவியை அதிமுக கொடுக்க உள்ள நிலையில், விஜயகாந்தும் மாநிலங்களவை பதவியைக் கேட்டுவருகிறார். தற்போது வாசனும் கேட்பதால் கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது.


தமிழக தேர்தல் பாஜக பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியுஷ் கோயலுடன் இதுதொடர்பாக வாசன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டு மக்களவை தொகுதிகளும், ஒரு  மாநிலங்களவை பதவியும் எதிர்பார்ப்பதாக அப்போது வாசன் கூறியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்கு அதிமுக உடன்படுமா எனத் தெரியவில்லை. என்றாலும் இன்றோ நாளையோ அதிமுக கூட்டணி இறுதி வடிவம் பெறும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.