ராமர்கோவில் பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 5ந் தேதி ராமர் கோவிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். 40 கிலோ எடை கொண்ட வெள்ளியால் செய்யப்பட்ட செங்கல் மூலம் பூமி பூஜை நடைபெற உள்ளது. இதற்கான விழாவில் மொத்தமாகவே 200 பேர் மட்டுமே பங்கேற்க உள்ளனர். விழாவில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் உத்தரபிரதேச மாநில அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு வந்துள்ளது.

அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில் உலகின் 3வது பெரிய கோவிலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் பாபர் மசூதி இருந்த இடத்தில் இந்த ராமர் கோவில் கட்டப்பட உள்ளது. உச்சநீதிமன்றம் ராமர் கோவில் கட்ட அனுமதி கொடுத்துள்ள நிலையில் அதற்கான பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருஅங்கமாகவே பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் பூமி பூஜைக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. அதிமுக துவக்கம் முதலே ராமர் கோவில் விஷயத்தில் ஒரு சார்பான நிலைப்பாட்டையே எடுத்திருந்தது.

பாபர் மசூதி இடிப்பு எனும் கரசேவைக்கு தமிழகத்தில் இருந்து ஜெயலலிதா ஆட்களை அனுப்பி வைத்தார் என்று கூட சொல்லப்பட்டதுண்டு. ஆனால் தனது கடைசி காலத்தில் ராமர் கோவில் விவகாரத்தில் ஜெயலலிதா பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. அதிமுக அரசும் கூட இந்த விஷயத்தில் ஒதுங்கியே இருக்கிறது. இதற்கு காரணம் சிறுபான்மையினர் வாக்கு வங்கி அரசியல். ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்றால் சிறுபான்மையினர் என்ன நினைப்பார்கள் என்கிற ஒரு கேள்வி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எழுந்துள்ளதாக கூறுகிறார்கள்.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சிறுபான்மையினர் வாக்குகளை கேள்விக்குறியாக்கும் ஒரு நிகழ்வில் பங்கேற்க வேண்டுமா? என்று எடப்பாடி தரப்பு கண்டிப்பாக யோசிக்கும் என்று சொல்கிறார்கள். அதே சமயம் ராமர் கோவில் பூமி பூஜை உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர்அலுவலகத்தின் நேரடி வழிகாட்டுதலின் அடிப்படையில்  விழாவிற்கான அழைப்பிதழ்கள் அனுப்பப்படுகின்றன. அப்படி இருக்கையில் விழாவில் பங்கேற்காமல் இருக்க முடியுமா? என்கிற கேள்வியும் எடப்பாடி தரப்பில் எழுந்துள்ளது.

தற்போது மாநிலம் விட்டு மாநிலம் செல்ல விமானப்போக்குவரத்து பெரிய அளவில் இல்லை. முதலமைச்சர் சென்னையில் இருந்து அயோத்தி செல்ல வேண்டும் என்றால் சிறப்பு விமானம் தான் ஒரே வழி. எனவே பயணக்காரணத்தை கூறி ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்காமல் தவிர்த்துவிடலாமா என்று எடப்பாடி தரப்பு யோசிக்க கூடும் என்கிறார்கள். ஆனால் பக்திமானான எடப்பாடி பழனிசாமி கண்டிப்பாக ராமர் கோவில் பூஜையில் பங்கேற்பார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதி  அளித்து வருகின்றன.