திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து, '' திமுக வன்னியர்களுக்கு செய்த துரோகம்'' என்ற தலைப்பில்  பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் திமுகவின் அறிவிப்பை பாராட்டியும், ராமதாஸை விமர்சித்தும்  வன்னிய சத்திரிய கூட்டியக்கம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது அதன்முழுவிவரம் பின் வருமாறு:-

வன்னியகுல சத்திரிய சமூகத்திற்கு உள்ஒதுக்கீடு மூலம் தனி ஒதுக்கீடும், 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 17 முதல் 26 வரை நடைபெற்ற இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 23 வன்னிய தியாகிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபமும் திமுக முன்னாள் அமைச்சரும், வன்னிய சமுதாயத்தின் பெருந்தலைருமான ஏ. கோவிந்தசாமி அவர்களுக்கு மணிமண்டபம் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அமைக்கப்படுமென திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இரண்டரை கோடி வன்னிய மக்கள் சார்பாக மனதார பாராட்டுகிறோம். திமுக ஆட்சிக்கு ஏற்பட்டு இந்த உள்ஒதுக்கீடு வழங்குவது மூலம் இரண்டரை கோடி வன்னிய மக்களின் கல்வி , வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மேலும் முன்னேற்றமடையும். அதேபோன்று மணிமண்டபம் அமைப்பதின் மூலம் வருங்கால சந்ததியினர்களுக்கு தியாகத்தையும், வரலாற்றையும் அறிந்து கொள்ளவும் செய்வார்கள். 1989ஆம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக வந்த பிறகு  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு ஏற்படுத்தி வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கினார்.

 

2006ம் ஆண்டு ஆட்சியில் பட்டியிலினத்தவர்களுக்கு வழங்கும் 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியினர் சமுதாயத்திற்கு உள்ஒதுக்கீடாக (எஸ்.சி.ஏ.) 3 சதவீதமும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 30 சதவீதத்தில் இஸ்லாமியர்களுக்கு உள்ஒதுக்கீடாக (பி.சி.எம்.) 3.5 சதவீதம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 20 சதவீதத்தில் வன்னியர்களின் எண்ணிக்கைக்கேற்ப உள்ஒதுக்கீடாக (எம்.பி.சி.) வழங்க வேண்டுமென நாங்கள் வலியுறுத்தி வந்தததின் பேரில் 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திண்டிவனத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் தனி உள்ஒதுக்கீடு வழங்கவேன் என கலைஞர் அறிவித்தார்.ஆனால் 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. ஏறக்குறைய 9 ஆண்டுகளாக தனி உள்ஒதுக்கீடும், தியாகிகள் மணிமண்டபம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். முதலமைச்சரையும் நேரில் சந்திக்கும்போது கேட்டுக் கொண்டோம். ஆனால் இதுவரை செவி சாய்க்கவில்லை. வன்னியர்களை வைத்து தங்களையும், தங்கள் குடும்பத்தையும் வளமாக்கி கொண்டவர்கள் கூட ஆளுங்கட்சி கூட்டணியிலிருந்தும் கேட்டுப் பெறவில்லை.

இந்நிலையில் திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் வன்னியர்கள் கோரிக்களை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றுவேன் என்று தெரிவித்துள்ளார். கலைஞர் சொன்னதை செய்வார்; மு.க.ஸ்டாலின் செய்வதை சொல்வார் என்பதில் வன்னிய மக்களுக்கு முழு நம்பிக்கையுள்ளது.விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அத்தொகுதியில்தான் வன்னிய தியாகிகள் அதிகளவில் துப்பாக்கி சூட்டில் பலியானார்கள். அந்த தியாகிகளுக்கு மணிமண்டபமும், அவர்கள் எந்த நோக்கத்திற்காக உயிர்திதியாகம் செய்தார்களோ அந்த தனி இடஒதுக்கீடும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வழங்குவோன் என மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். எனவே அவர்களின் தியாகத்தை போற்றும் வகையிலும், அவர்களுடைய எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் வன்னிய மக்கள் விக்கிரவாண்டி தொகுதியில் யாருக்கு வாக்களித்தால் சமுதாயத்திற்கு நன்மை கிடைக்கும் என்பதை எண்ணி வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.