Asianet News TamilAsianet News Tamil

தமிழ்த்தாய் வாழ்த்து.. இதயப்பகுதியை வெட்டி எடுத்த வரலாறு சரி செய்யப்படுமா?- வானதி சீனிவாசன் ட்வீட்

தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த தமிழக அரசின் ஆணையை மகிழ்வுடன் வரவேற்பதாகவும் தமிழறிஞர் மனோண்மணியம் சுந்தரம்பிள்ளை எழுதிய முழுப் பாடலையும் பாட தமிழக முதலமைச்சர் உத்தரவிடவேண்டும் என்றும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
 

Vanathi Srinivasan tweet
Author
Tamilnádu, First Published Dec 17, 2021, 6:07 PM IST

தமிழ்தாய் வாழ்த்து பாடலை தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்தாய் வாழ்த்துப் பாடும் போது இனி அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து முதல்வர், அரசாணை வெளியிட்டுள்ளார். அதேபோல, தமிழ்தாய் வாழ்த்து பாடும்போது, எழுந்து நிற்பதில் இருந்து மாற்று திறனாளிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள் எழுதிய "நீராருங் கடலுடுத்த" என்ற பாடல் 55 வினாடிகளில் முல்லைப்பாணி ராகத்தில் மூன்றாம் நடையில் பாடப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்தாய் வாழ்த்து பாடலை பயிற்று பெற்றவர்கள் கொண்டு பாட வைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

1891ம் ஆண்டு வெளியிடப்பட்ட புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணியம் என்னும் நூலில் "தமிழ் தெய்வ வணக்கம் " என்ற தொகுப்பின் கீழ் உள்ள ஒரு பகுதியை நாம் தமிழ் தாய் வாழ்த்தாக பாடி கொண்டிருக்கிறோம். தமிழக அரசின் பாடலாக இதை அறிவிக்க வேண்டும் என்று அன்றைய முதலமைச்சர் அறிஞர் அண்ணாவிற்கு, தமிழ்ச் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். அந்த வகையில், தமிழறிஞர்கள், ஆர்வலர்கள் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று, 1970ம் ஆண்டு, மார்ச் 11ம் தேதியன்று  அன்றைய முதலமைச்சர் கருணாநிதி "இனி தமிழக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும். 'நீராருங் கடலுடுத்த' எனும் மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய பாடலே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக அமையும்" என்று அறிவித்தார்.

இந்நிலையில்தான், இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்தாய் வாழ்த்து பாடலை தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினை, பல கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர். அந்த வகையில், பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசனும் வரவேற்றுள்ளார். அத்துடன் முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கையையும் வைத்துள்ளார்.

இது தொடர்பான அவர் பதிவில் "தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த தமிழக அரசின் ஆணையை மகிழ்வுடன் வரவேற்கிறேன். தமிழறிஞர் மனோண்மணியம் சுந்தரம்பிள்ளை எழுதிய முழுப் பாடலையும் பாட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிடவேண்டும். இதயப்பகுதியை வெட்டி எறிந்த வரலாறு சரி செய்யப்படவேண்டும்." என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

’தமிழர் நல் திருநாடும்’என்று இருந்த வார்த்தை அப்போது இருந்த முதலமைச்சர் கருணாநிதி உத்தரவின் பேரின் ’திராவிட நல் திருநாடும்’ என்று திருத்தப்பட்டது என்று கூறப்பட்டு வரும் நிலையில், இதயப்பகுதியை வெட்டி எறிந்த வரலாறு சரி செய்யப்படவேண்டும் என்று வானதி குறிப்பிட்டுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. அவரது பதிவிற்கு நெட்டிசன் பலவாறு தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios