சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று விடுதலையான சசிகலா தமிழக அரசியலில் பரபரப்பை உண்டாக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதிமுகவுடன் அமமுகவை இணைக்கும் முயற்சியிலும் பாஜக ஈடுபட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் சசிகலாவையும், தினகரனையும் எக்காரணம் கொண்டும் கட்சியில் சேர்க்கமாட்டோம் என எடப்பாடியார் கறார் காட்டி வந்தார். இந்நிலையில் விகே சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை கிளப்பியுள்ளது. 

தான் எந்தவொரு பதவிக்கும் படத்திற்கும் ஆசைப்பட்டதில்லை என்று தெரிவித்துள்ள சசிகலா, அரசியலை விட்டு ஒதுங்குவதாகவும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமையப் பிரார்த்திப்பேன் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார். நம் பொது எதிரி திமுக ஆட்சியில் அமர விடாமல் தடுத்து ஜெயலலிதா ஆட்சி அமையப் பாடுபட வேண்டும். என் மீது அன்பும் அக்கரையும் காட்டியே ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்களுக்கும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பாஜக தேசிய மகளிரணி தலைவியான வானதி சீனிவாசன், விகே சசிகலா அரசியலில் இருந்து விலக பாஜக தான் காரணம் என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார். தமிழகத்தில் அதிமுகவிலோ, அரசாங்கத்திலோ எது நடத்தாலும் பாஜக பின்னணியில் இருந்து அழுத்தம் கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கள் வேண்டுமென்றே பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. எனவே சசிகலா விவகாரத்தில் அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும், அதற்கும் பாஜகவிற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என பல தலைவர்கள் விளக்கமளித்து விட்டனர். 

அப்படி பாஜக அழுத்தம் கொடுத்து விலக வேண்டிய நிலையில் சசிகலா உள்ளாரா?, அவ்வாறு அழுத்தம் கொடுத்திருந்தால் அவர் வெளிப்படையாக சொல்லியிருக்கலாமே? என கேள்வி எழுப்பிய வானதி சீனிவாசன், இதுபோன்ற தகவல்கள் அரசியல் காரணங்களுக்காக பரப்பப்படுவதாகவும் கூறியுள்ளார்.