அண்மையில் பாஜகவில் தேசிய அளவிலான பதவிகள் நிரப்பப்பட்டன. இதில் தமிழகத்திலிருந்து தேசிய செயலாளராக இருந்த ஹெச்.ராஜா பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம் தமிழக பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. தமிழக பாஜகவினர் மத்திய பாஜகவினரால் புறக்கணிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் மாநில தலைவர் எல்.முருகன் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்து அதிருப்தியைத் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தமிழக பாஜக துணைத் தலைவர் வானதி ஸ்ரீனிவாசனை தேசிய மகளிரணித் தலைவராக நியமித்து பாஜக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பாஜக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவராக வானதி ஸ்ரீனிவாசனை ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். உடனடியாக அவர் இந்தப் பதவியில் நியமிக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நீண்ட காலமாக பாஜக முகங்களாக இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், ஹெச்.ராஜா உள்ளிட்டவர்களுக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. தற்போது வானதி ஸ்ரீனிவாசன் தேசிய அளவிலான பதவி வழங்கப்பட்டுள்ளது.