குண்டர் சட்டத்தை உடைத்து வெளியே வந்தார் வளர்மதி… பேராட்டத்தை  தொடரப்போவதாக  உறுதி…

கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடியதால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதி விடுதலை செய்யப்பட்டார்.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்திற்கு ஆதரவாக சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதி , கடந்த ஜூலை மாதம் 13-ம் தேதி மாணவிகளிடம் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தார்.

இதையடுத்து வளர்மதிளை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோவையில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்ட அவர், குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். 

வளர்மதி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி, வளர்மதியில் தந்தை மாதையன் உயர்நீதி மன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில்  மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், குண்டர் சட்டத்தின் கீழ் வளர்மதியை கைது செய்த நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது. 

இந்த உத்தரவு கோவை சிறை கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்துது. இதையடுத்து சிறை நடைமுறைகள் முடிந்து, வளர்மதி நேற்று  மாலை விடுதலை செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய,  வளர்மதி, அடிப்படை உரிமைகளுக்காக போராடினால் காவல்துறையினர் கைது செய்வதாக குற்றம் சாட்டினார்.  ஆனாலும் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து போராடப் போவதாக வளர்மதி தெரிவித்தார்.