vairamuthu gave fund for tamil seat in harvard university

350 ஆண்டுகள் பழமை வாய்ந்த அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி இருக்கை அமைவதற்கான நிதி திரட்டப்பட்டு வருகிறது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான இருக்கை அமைவதன் மூலம் தமிழ் மொழியின் பெருமையும் பழமையும் உலகளவில் மேலும் சிறப்பாக பறைசாற்றப்படும். இன்னும் அதிகமான வெளிநாட்டினர் தமிழ் மொழியை கற்று தமிழ்நாட்டிலும் தமிழ் மொழியிலும் மேலும் பல ஆய்வுகளை மேற்கொள்ள வாய்ப்பாக அமையும்.

பழந்தன்மை, சார்பற்ற தனித்தன்மை, பல்வேறு வழக்குகள் இருந்தாலும் பொதுவான எழுத்துகள், சார்பற்று இருத்தல், பன்மொழிகளைப் பிறப்புவிற்பதற்கான தாய்மைத்துவம், பண்பாட்டு கலைத்தன்மை, விடுதலை, இலக்கிய வளம், மேன்மைமிகு மேற்கோள்களும் சிந்தனை வளம், எனப் பதினொரு வகை தகுதிகளில் அனைத்தையும் கொண்டிருப்பது தமிழ் மட்டுமே ஆகும். 

ஆனால், மிக அதிக மக்கள் தொகை கொண்ட சீனமும் அங்கு இருக்கை கொண்டுள்ளது. மிகக்குறைவான மக்களால் பேசப்படும் ஹீப்ருவும் தனக்கென தனி இருக்கை கொண்டுள்ளது. இவ்வளவு ஏன் சொற்ப நபர்களே பேசும் சமஸ்கிருதம் கூட இந்திய அரசின் ஆதரவுடன் தனி இருக்கையினை பெற்றுள்ளது. 

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு ரூ.39 கோடி செலுத்த வேண்டும். அதில் 9.75 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கியுள்ளது. மீதமுள்ள தொகை திரட்டப்பட்டு வருகிறது. உலகம் முழுதும் உள்ள தமிழர்கள் இதற்கான நிதியை வழங்கிவருகின்றனர். 

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நிதி திரட்டும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வைரமுத்து, இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில், அவரது புத்தகங்களின் விற்பனையின் மூலம் கிடைத்த 4 லட்சத்து 61 ஆயிரம் ரூபாயை முழுமைப்படுத்தி 5 லட்சமாக வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, தமிழ் மொழியின் பெருமை குறித்து பேசினார். தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட திமுக தலைவர் கருணாநிதிக்கும் தமிழை செம்மொழியாக அறிவித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசுக்கும் நன்றி தெரிவித்தார்.

350 ஆண்டுகள் பழமையான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை அமைவது தமிழுக்கு பெருமை என்றால், 3000 ஆண்டுகள் பழமையான தமிழ் மொழியின் இருக்கை அமைவது ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கும் பெருமைதான் என வைரமுத்து பேசினார்.