Vairamuthu Controversy Vivek Twitt

கவிப்பேரரசு மன்னிப்பு கேட்பதும், பெருங்கவியை மன்னித்தலும் பண்பாடு என்று ஆண்டாள் குறித்த சர்ச்சை குறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் குறித்து கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம், கடவுள்களுக்கிடையே உள்ள வேறுபாடு பற்றி அவர் கருத்து தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து, தனது டுவிட்டர் பக்கத்தில் எவரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல என்றும், புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் என்றும் பதிவிட்டிருந்தார். ஆனாலும், கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன. பாஜகவைச் சேர்ந்தவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாஜகவினர், கவிஞர் வைரமுத்து குறித்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவாகவும் கருத்துக்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வைரமுத்துவுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், அனைவரும் கண்ணியம் காக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். தமிழுக்கும் இலக்கியத்துக்கும் திரைப்படப்பாடலுக்கும் பெரும் பங்களிப்பு செய்தவர் கவிப்பேரரசு. அவர் படைத்த மரங்கள் கவிதை வனங்களின் தேசிய கீதம் என்று குறிப்பிட்டுள்ளார்

மற்றொரு டுவிட்டர் பதிவில், அனைத்து மத ஆன்மீக உணர்வுகளையும் நாம் மதிக்க வேண்டும். தாயார் ஆண்டாள் இறையருள் பெற்ற கவி. ஆழ்வார்களில் ஒருவராக போற்றப்படுகிறார். யாரோ வெளி நாட்டில் எழுதிய கட்டுரை தேவையற்றது. 

கவிப்பேரரசு மன்னிப்பு கேட்பதும், அந்த பெருங்கவியை மன்னித்தலும் பண்பாடு என்று டுவிட்டரில் விவேக் பதிவிட்டுள்ளார். விவேக்கின் இந்த பதிவால். பலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.