ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது டி.டி.வி தினகரனுக்கு வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் இரண்டரை கோடி ரூபாய் கொடுத்ததற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக வருமான வரித்துறை வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி அடைந்த தினகரன் உடனடியாக அதனை மறுத்து ட்வீட்டியுள்ளார்.

 

வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 500 பேர் இரவு பகலாக கடந்த ஒரு வார காலமாக வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் தொடர்புடைய இடங்களை சல்லடை போட்டு சோதனை போட்டு முடித்துள்ளனர். சோதனை முடிந்தாலும் கூட கைப்பற்றப்பட்ட ஆவணங்களை மதிப்பிடும் மற்றும் சரிபார்க்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. அப்படி இரண்டு நாட்களாக நடைபெற்ற ஆய்வுக்கு பிறகு வருமான வரித்துறை கசியவிட்ட தகவல் தான் தற்போது தமிழக அரசியலின் ஹாட் டாபிக். 

அதாவது சுமார் 800 கோடி ரூபாய் அளவிற்கு வி.வி.மினரல்ஸ் நிறுவனம் வரி கட்டாமல் ஏமாற்றியிருப்பதாக வருமான வரித்துறை கூறியுள்ளது. மேலும் 2500 கோடி ரூபாய் அளவிலான வருமானத்திற்கு வி.வி மினரல்சால் தற்போது வரை கணக்கு காட்ட முடியவில்லை. இது போதாக்குறைக்கு ரொக்கமாக எட்டு கோடி ரூபாயை அள்ளியுள்ளது வருமான வரித்துறை. ஆனால் வருமான வரித்துறை வெளியிட்ட இரண்டரை கோடி ரூபாய் தொடர்புடைய ஒரு தகவல் தான் அரசியலாகியுள்ளது. 

அதாவது வைகுண்டராஜன் வீட்டில் நடைபெற்ற சோதனையின் போது கிடைத்த ஆவணங்களில் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்ட தினகரனுக்கு இரண்டரை கோடி ரூபாயை வி.வி.மினரல்ஸ் கொடுத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக கொளுத்தி போட்டுள்ளனர் வருமான வரித்துறை அதிகாரிகள். அதாவது ரத்தான ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில் இந்த பணம் கைமாறியுள்ளதாக கூறியுள்ளனர் அதிகாரிகள்.

 இந்த தகவல்கள் ஊடகங்களில் வெளியான உடன் தினகரன் பதற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது. வழக்கமாக வருமான வரித்துறை சோதனை என்றால் தினகரன் பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டார். அதுவும் சசிகலா தொடர்புடைய இடங்களில் இந்த ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு சொத்துகள் கணக்கிடப்பட்டுள்ளதாக கூட தகவல் வெளியானது.

ஆனால் அதனை எல்லாம் தினகரன் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஆனால் இந்த இரண்டரை கோடி ரூபாய் மேட்டரில் தினகரன் மிகவும் டென்சன் ஆகியுள்ளனார். இந்த செய்தியை வெளியிட்ட தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியரை தினகரனே நேரடியாக தொடர்பு கொண்டு ஏன் இப்படி போடுகிறிர்கள்? உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது? என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ளார். பின்னர் தினகரன் தரப்பு ரெக்வஸ்ட் செய்த பிறகு அந்த செய்தியை அந்த பிரபல சேனல் நிறுத்தியது. 

இதே போல் தினகரனுக்கு வைகுண்டராஜன் இரண்டரை கோடி ரூபாய் கொடுத்ததாக செய்தி வெளியான தொலைக்காட்சிகள் அனைத்துக்கும் தினகரன் தரப்பில் இருந்து ரெக்வஸ்ட் சென்றுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த செய்தியை கட்டுப்படுத்த முடியாத நிலையில் தான் தினகரன் மறுப்பு தெரிவித்து ட்விட்டரில் விளக்கம் அளித்தார். எந்த விவகாரத்திற்குள் எளிதில் உணர்ச்சிவசப்படாத தினகரன் வைகுண்டராஜன் விவகாரத்தில் மட்டும் உணர்ச்சிவசப்படுவது ஏன் என்பது தான் தற்போது மில்லியன் டாலர் கேள்வி.