மவுலிவாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பு தகர்க்கப்பட்டதால், வீடு வாங்குவதற்கு பணம் செலுத்தியவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை - போரூர் மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த அடுக்கு மாடி குடியிருப்பு 2014, ஜூலை 28 ஆம்தேதி திடீரென்று இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 61 பேர் பலியான சோக நிகழ்வு நடந்தது என தெரிவித்துள்ளார்.
11 மாடிகளைக் கொண்ட தலா இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்பில், ஒரு கட்டிடம் இடிந்தபின்னர், இன்னொரு கட்டிடமும் ஆபத்தான நிலையில் இருந்தது.

மவுலிவாக்கம் பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தலை கொடுத்து வந்த அடுக்குமாடிக் குடியிருப்பு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் நேற்று மாலை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் திட்டமிட்ட ஏற்பாட்டின்படி வெற்றிகரமாக வெடி வைத்து தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டது வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும்.
மவுலிவாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பு தகர்க்கப்பட்டதால், வீடு வாங்குவதற்கு பணம் செலுத்தியவர்கள் இடிந்து போய் தவித்துக்கொண்டு இருக்கின்றனர்.
பணம் செலுத்திய மக்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கிட தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். அடுக்குமாடிக் கட்டிடம் இடிக்கப்பட்டதால் அருகில் இருக்கும் 40க்கும் மேற்பட்டவீடுகள் விரிசலடைந்து பாதிக்கப்பட்டு இருக்கின்றன. பாதிப்புக்குள்ளான வீடுகளை செப்பனிட்டு தருவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொது செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
