சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு முறை இல்லை என்று வைகோ பிரச்சனையை திசை திருப்புவதாக பலரும் விமர்சித்துள்ளனர்.
சட்டபேரவை வாக்கெடுப்பு குறித்து வைகோ அறிக்கை:
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு, ரகசியமாக நடைபெற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் திரும்பத் திரும்பக் கூறுவதும், அதனையே வலியுறுத்தி சமூகத்தின் பல்வேறு துறைகளில் இருக்கின்ற பலர் ஆதரித்து அறிக்கை விடுவதும், தொலைக்காட்சிகளில் அக்கருத்தை பதிவு செய்வதும் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு சட்டசபை விதிகளும், நாடாளுமன்ற மரபுகளும் எப்படி திட்டவட்டமாக வரையறுத்துள்ளன என்பதை தெளிவுபடுத்த நான் விரும்புகிறேன்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய வாக்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
1952 ஜூலை 3ஆம் தேதி மூதறிஞர் ராஜாஜி அவர்களின் அமைச்சரவைக்கு நம்பிக்கை வாக்கு சட்டப்பேரவையில் நடைபெற்றபோதும், 1972 டிசம்பரில் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் மீதான நம்பிக்கை வாக்கின் போதும், 1988 ஜனவரி 28 ஆம் தேதி முதல்வர் ஜானகி அம்மையார் அவர்களின் அமைச்சரவை நம்பிக்கை வாக்கின்போதும் எத்தகைய முறை கடைப்பிடிக்கப்பட்டதோ, அதே முறையைத்தான் இன்றைய சட்டப்பேரவைத் தலைவர் தனபால் கடைப்பிடித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு என்பதே கிடையாது. சட்டங்களை நிறைவேற்றும்போது பெரும்பாலும் குரல் வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மை உறுதி செய்யப்படும்.

யாராவது ஒரு உறுப்பினர் எழுந்து குரல் வாக்கெடுப்பு கூடாது, டிவிசன் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், அவைத்தலைவர் நிராகரிக்கக்கூடாது என்பது இதுவரை பின்பற்றப்படும் மரபாகும்.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து மூத்த அரசியல் கட்சித்தலைவர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
வைகோ தனக்கு சாதகம் என்றால் எதையும் திரித்து கூறுவார். பாராளுமன்றத்திலும் சட்ட சபையிலும் ரகசிய வாக்கெடுப்பு நடந்துள்ளது.
உச்சநீதிமன்றமே வழிகாட்டுத கொடுத்துள்ள சம்பவ முன்னுதாரணமும் உண்டு . அதை வசதியாக மறக்கிறாரா? மறைக்கிறாரா?.

உண்மை என்ன இதற்கு முன்னர் ர் உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வர் பெரும்பான்மையை நிருபிக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அம்மாநில தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இதே போல் 1998 ஆம் ஆண்டு கல்யாண்சிங் , ஜெகதாம்பிகா பால் வழக்கில் உச்சநீதிமன்றமே உத்தரவிட்டு ரகசிய வாக்கெடுப்பு நடந்துள்ளது .
ஆகவே வைகோ விவகாரத்தை திசை திருப்பவே இது போன்ற அறிக்கைகள் வெளியிட்டுள்ளார் என்று மூத்த அரசியல்வாதி ஒருவர் தெரிவித்தார்.
