சிலை திருட்டு விசாரணை காவல்துறை அதிகாரியை
தமிழக அரசு மாற்றத் துடிப்பது ஏன்? யாரைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை? என வைகோ கேள்விஎழுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில்; ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழக மன்னர்கள் கட்டி எழுப்பிய திருக்கோவில்களில் மிகப் பழமையான, விலைமதிக்க முடியாத வெண்கலச் சிலைகளும், கற்சிலைகளும் தமிழகமெங்கும் உள்ளன. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்திலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள சிலை கடந்துகின்ற கொள்ளைக்காரர்கள் கோவில் சிலைகளைக் கடத்தி கோடிக்கணக்கான ரூபாய் விலைக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர் மகாதேவன் அவர்கள், இப்பிரச்சினையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தமிழக அரசு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று கருதி, கடந்த 2017 ஆம் ஆண்டு, ஜூலை 21 ஆம் நாள் நேர்மைக்கும், திறமைக்கும், துணிச்சலுக்கும் எடுத்துக்காட்டாக தமிழகக் காவல்துறையில் விளங்கும் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் அவர்களை சிலை கடத்தல் விசாரணை நடவடிக்கை அதிகாரியாக நியமித்தார்.

இந்த நியமனத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றம் அந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து, ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்தான் விசாரிக்க வேண்டும் என்று கூறியது.

இந்த நடவடிக்கைகளால் 70 நாட்கள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் எந்த விசாரணையிலும் ஈடபட முடியவில்லை. இதற்குப் பின்னர்தான் தமிழக காவல்துறை அவரது விசாரணைக்கு உதவ 200 காவலர்களை அறிவித்தது.

கோவில் சிலைகளைக் கடத்தியவர்கள் குறித்து விசாரிக்கும்போது, ரகசியத்தைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தை முன்னிட்டு, பொன்.மாணிக்கவேல் அவர்கள் அந்தந்த ஊர்களில் உள்ள நான்கு காவலர்களை மட்டும் உடன் அழைத்துக்கொண்டு சென்றார். பல வேளைகளில் ஆட்டோ ரிக்ஷாவில் பயணித்து, உயிருக்குத் துணிந்து மின்னல் வேகத்தில் செயல்பட்டார்.

திரிபுரந்தான் பிரகதீஸ்வரர் கோவிலில் உள்ள 8 சிலைகள் கடத்தப்பட்டதைக் கண்டுபிடித்தார். 150 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளில் 31 கோடியே 80 இலட்சம் மதிப்புள்ள ஒரு சிலையை ஆஸ்திரேலிய நாட்டின் கேன்பரா நகரத்தில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் கண்டுபிடித்தார்.

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுபாஸ்சந்திர கபூர், ஆலயத்தில் இருந்த சிலை என்பதை மறைந்து பொய்யான ஆவணங்களின் மூலம் விற்றுவிட்டார். இந்தச் சிலையை மீட்டுக்கொண்டு வந்தவர் பொன்.மாணிக்கவேல்.

விருத்தாச்சலத்தில் உள்ள விருதகிரீஸ்வரர் ஆலயத்திலிருந்து 240 கிலோ எடை உள்ள 6 சிலைகளை இந்தோ - நேபால் ஆர்ட் சென்டரில் பொன்.மாணிக்கவேல் கண்டுபிடித்தார். 1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த ஆலயத்தில் சோழப்பேரரசி செம்பியன்மாதேவி கண்டராதேத்தேஸ்வரம் என்ற மண்டபத்தையும் கட்டியுள்ளார்.

தமிழக காவல்துறை தலைமை அதிகாரிக்கு உரிய அறிக்கைகளை அவ்வப்போது பொன்.மாணிக்கவேல் அவர்கள் வழங்கி உள்ளார்.

திரு பொன்.மாணிக்கவேல் அவர்களுக்கும், எனக்கும் நட்போ, பரிட்சியமோ கிடையாது. அவரது நேர்மை, நாணயம், திறமை, உண்மை, துணிச்சலை நான் நன்கு அறிவேன். தற்போது வேலூர் கோவில் சிலை திருட்டையும் கண்டுபிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குக் கடத்தப்பட்ட சிலைகளை மீட்டுக்கொண்டுவந்தவர் பொன்மாணிக்கவேல் ஆவார்.

இந்தப் பின்னணியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பொன்.மாணிக்கவேல் அரசுக்கு ஒத்துழைப்புத் தரவில்லை என்றும், சரியாகச் செயல்படவில்லை என்றும் கூறி சிலைக் கடத்தல்  விசாரணையை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்திருப்பது அப்பன் குதிருக்குள் இல்லை என்ற பழமொழியை நினைவூட்டுகிறது.

அசாம் மாநிலத்தில் நேர்மையான போலிஸ் அதிகாரியாக பணியாற்றிய தமிழரான ராஜமார்த்தாண்டன் என்ற ஐ.பி.எஸ். அதிகாரி பழிவாங்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதை அறிந்த நான் அம்மாநில முதலமைச்சரோடு தொடர்புகொண்டு, அந்த நடவடிக்கையை இரத்து செய்ய வைத்தேன்.

இன்னும் சில மாதங்களில் ஓய்வுபெற இருக்கும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அவர்கள் சிலை கடத்தல் விசாரணையை தொடர்ந்து நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். நீதிமன்றத்தில் தொடுத்த மனுவைத் திரும்பப் பெற வேண்டும். என கூறியுள்ளார்.