*    பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைவாக இருப்பது குறித்து நான் கவலைப்படவில்லை. ஏதாவது ஒரு விஷயத்தால் தான் இது போன்ற பிரச்னைகள் ஏற்படும். அதன் தாக்கம் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் எதிரொலிக்கத்தான் செய்யும்.
-    பிரணாப் முகர்ஜி (மாஜி குடியரசு தலைவர்)

*    குடியுரிமை சட்ட திருத்த மசோதா, மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கையை தான் காட்டுகிறது. பா.ஜ.க. அரசு ஒரு பக்கம் காந்தியின் 150 வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. மற்றொரு பக்கம் இது போன்ற மசோதாக்களை நிறைவேற்றுகிறது. 
-    பிரியங்கா காந்தி (காங் பொதுச்செயலாளர்)

*    பாலியல் பலாத்கார வழக்கின் விசாரணையை, வழக்கு பதிவு செய்த 7 நாட்களில் முடிக்க வேண்டும். குற்றம் நடந்த 14 நாட்களுக்குள் விசாரணை முற்றுப் பெற வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 21 நாட்களுக்குள் குற்றவாளிக்கு தூக்குதண்டனை நிறைவேற்ற வேண்டும். சமூக வலைதளங்களில் பெண்களை கேவலமாக சித்தரிக்கும் பதிவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை. 
-    ஜெகன் மோகன் ரெட்டி (ஆந்திர முதல்வர்)

*    குடியுரிமை சட்ட திருத்த மசோதா குரித்து நம் சகோதர - சகோதரிகள் அச்சப்பட தேவையில்லை. யாரும் உங்களுடைய உரிமையை பறித்துக் கொள்ள முடியாது. உங்களுக்குள்ள அடையாளம், இந்த அழகான கலாசாரத்தை பறிக்க விட மாட்டோம்! அது மேலும் வளர்வதற்கு உதவுவோம்!
-    நரேந்திர மோடி (இந்திய பிரதமர்)

*    விமான போக்குவரத்து துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடன் பிரச்னையால் முடங்கிய, ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தின், விமான சேவை உரிமங்கள், பிற விமான நிறுவனங்களுக்கு பிரித்து அளிக்கப்பட்டுள்ளன. 
-    ஹர்தீப் சிங் புரி (விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர்)

*    உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த பதவியை வழங்குவது என்ற பேச்சு நடந்து வருகிறது. ரஜினியிடம் எந்த கட்சியும் ஆதரவு கேட்காத நிலையில், எங்கள் ஆதரவு யாருக்கும் இல்லை என்று அவர் அறிவித்துள்ளது வினோதமாக இருக்கிறது. 
-    சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி தலைவர்)

*    உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, விஜயகாந்தின் தீவிர விசுவாசிகளுக்குதான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவர்களையே வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். அதே நேரத்தில், அவர் எதிரணி வேட்பாளர்களை எதிர்க்குமளவுக்கு பண பலம் பெற்றிருக்க வேண்டும். 
-    பிரேமலதா (தே.மு.தி.க. பொருளாளர்)

*    ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்களால் அ.ம.மு.க. உருவாக்கப்பட்டது. அதிகார வர்க்கத்தின் இடையூறுகளைத் தாண்டி, தேதல் ஆணையம் எங்கள் கட்சியை பதிவு பெற்ற கட்சியாக அங்கீகரித்துள்ளது. இதனால் எங்கள் கட்சியினர் உற்சாகத்துடன்  தேர்தலை சந்திப்பர். 
-    தினகரன் (அ.ம.மு.க. பொதுச்செயலாளர்)

*    உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தி.மு.க.வுக்கு தைரியம் இல்லை. அதனால்தான் வேண்டுமென்றே உச்ச நீதிமன்றத்தை அக்கட்சி நாடியது. ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பு, அவர்களுக்கு சம்மட்டி அடியாக விழுந்துள்ளது. 
-    சி.வி.சண்முகம் (சட்டத்துறை அமைச்சர்)

*    பாரதியார் தன் கவிதைகளில் வளமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். இந்த சமூகத்தை மேம்படுத்தும் வகையில் பாடல்கள் எழுதியுள்ளார். எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளதால் குழந்தைகள் கூட, பாரதியார் பாடலை பாடுகின்றனர். 
-    பன்வாரிலால் புரோஹித் (தமிழக கவர்னர்)

*    இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களைப் பற்றி, மத்திய அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை அளிப்பது பற்றி, கொஞ்சமும் யோசிக்கவில்லை. ஆனால் இலங்கை அதிபரோடு கை குலுக்கி, கொஞ்சி குலாவத்தான் அவர்களுக்கு நேரம் இருக்கிறது. 
-    வைகோ (ம.தி.மு.க. பொதுச்செயலாளர்)