Asianet News Tamil

கொரோனா கொள்ளை நோயைவிட துயரம்...பாசிசத்தின் ஆக்டோபஸ் கரங்களில் நாடு...விளாசி தள்ளிய வைகோ!

 "அணுசக்தித்துறை, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்புத் துறை போன்றவற்றில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்துவது போன்ற முக்கிய அறிவிப்புகளைச் செய்தியாளர்களைக் கூட்டி வெளியிட்டதன் மூலம் பா.ஜ.க. அரசு நாடாளுமன்ற ஜனநாயகத்தைத் துச்சமாகக் கருதி வருவதை உறுதி செய்து இருக்கிறது. கொரோனா கொள்ளை நோயைவிட பெரிய துயரம், நாடு பாசிசத்தின் ஆக்டோபஸ் கரங்களால் நெறிக்கப்படுவது ஆகும். இத்தகைய சர்வாதிகாரப் போக்குகளை மக்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்”.

Vaiko slam PM Modi government on 20 Lakh cr scheme announcement
Author
Chennai, First Published May 18, 2020, 8:55 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

கொரோனா கொள்ளை நோயைவிட பெரிய துயரம், நாடு பாசிசத்தின் ஆக்டோபஸ் கரங்களால் நெறிக்கப்படுவது ஆகும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு அமலானது முதலே ஏழை, எளிய மக்களுக்கு  நிதி உதவி வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. ஏழை, எளிய மக்கள் கஷ்டத்திலிருந்து மீள அவர்களுடைய கையில் பணம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் யோசனை கூறின. கொரோனா பாதிப்பிலிருந்து மீளும் வகையில் பொருளாதார மீட்புத்திட்டமாக 20 லட்சம் கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 20 லட்சம் கோடி தொகுப்பிலிருந்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இந்தத் திட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன.
இந்நிலையில் நிர்மலா சீத்தாராமனின் அறிவிப்புகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கொரோனா ஊரடங்கால் முடங்கியுள்ள இந்தியப் பொருளாதாரத்தை மீட்பதற்கு ‘சுயசார்பு பொருளாதாரத் திட்டம்’ எனும் பெயரில் மோடி அரசால் 20 லட்சம் கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. கொரேனா பேரிடரால் வாழ்விழந்து தவிக்கும் கோடானகோடி ஏழை எளிய மக்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், 45 கோடிக்கும் அதிகமான அமைப்புச்சாரா தொழிலாளர்கள், வேலை வாய்ப்பை இழந்துள்ள 9 கோடி பிற தொழிலாளர்களுக்கு நேரடியாகப் பணப்பயன் அளிக்கும் மனிதநேயத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்துள்ள திட்டங்களால் வேளாண்மைத் தொழிலை நம்பியுள்ள விவசாயிகள் வாழ்வில் வசந்தம் வீசும் என்ற நம்பிக்கையும் இல்லை. கடனில் மூழ்கித் தத்தளிக்கும் விவசாயிகளை கை தூக்கி விடுவதற்கும் இந்த அரசுக்கு மனம் இல்லை. கொரோனா நெருக்கடி காலத்தில் பா.ஜ.க. அரசு மாநில உரிமைகள் அனைத்தையும் தட்டிப் பறித்துக்கொண்டு, எல்லா அதிகாரங்களும் எங்களுக்கு என்னும் எதேச்சாதிகாரமான ஆணவ தர்பாரை நடத்திக்கொண்டு இருக்கிறது. மாநிலங்களுக்கான வரிப் பங்கீடு 46,038 கோடி, வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.12,390 கோடி, தேசியப் பேரிடர் நிவாரண நிதி ரூ.11,092 கோடி மாநிலங்களுக்கு வழங்கி இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் கூறி இருப்பது யானைப் பசிக்குச் சோளப் பொரியாகும். கடன் பெறும் திறனை உயர்த்துவதால் மாநிலங்களின் கடன் சுமைதான் அதிகரிக்கும்.


மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதாரத்துறையைச் சந்தடி சாக்கில் முழுமையாக மத்திய அரசின் கீழ் கொண்டு செல்வதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய கல்விக் கொள்கைக்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்ததை அலட்சியம் செய்துவிட்டு, அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளைச் செயல்படுத்தப் போவதாக அறிவித்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. கொரோனா பேரிடரைப் பயன்படுத்தி நிலக்கரி, தாதுவளம், பாதுகாப்புத் தளவாட உற்பத்தி, வான்வெளி மேலாண்மை, விமான நிலையங்கள், விமானம் பழுது பார்த்தல் - பராமரிப்பு, யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் மற்றும் விண்வெளித்துறை ஆகிய எட்டு முக்கியத் துறைகளையும் பா.ஜ.க. அரசு தனியாருக்குத் தாரை வார்க்கப் போகின்றது.


தொழில் வளர்ச்சியிலும், பொருளாதார முன்னேற்றம், சுயசார்பு தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றில் இந்தியா சிகரம் தொடுவதற்கு அடித்தளமாக விளங்கிய பொதுத்துறை நிறுவனங்களை முழுக்க முழுக்க தனியார் பெரு முதலாளிகளுக்கு ஏலம் விடும் அக்கிரமத்தை எப்படிச் சகித்துக்கொள்ள முடியும்? நிலக்கரிச் சுரங்கம், மீத்தேன் எரிவாயுத் திட்டம் ஏலம் விடப்படுவதுடன், நிலக்கரிச் சுரங்கத்தில் அரசின் முற்றுரிமை நீக்கப்பட்டு, எந்தவொரு தனியார் நிறுவனமும் ஏலம் எடுத்து, திறந்த சந்தையில் விற்கலாம் என்று நிதி அமைச்சர் கூறி உள்ளார்.


காவிரிப் படுகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு இதுவரையில் திரும்பப் பெறாமல், தற்போது மேலும் இத்தகைய நாசகாரத் திட்டங்களுக்கு பொது ஏலம் விடுவோம் என்று அறிவித்து இருப்பது காவிரிப் பாசனப் பகுதிகளைக் கடுமையாகப் பாதிக்கும். அணுசக்தித்துறை, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்புத் துறை போன்றவற்றில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்துவது போன்ற முக்கிய அறிவிப்புகளைச் செய்தியாளர்களைக் கூட்டி வெளியிட்டதன் மூலம் பா.ஜ.க. அரசு நாடாளுமன்ற ஜனநாயகத்தைத் துச்சமாகக் கருதி வருவதை உறுதி செய்து இருக்கிறது. கொரோனா கொள்ளை நோயைவிட பெரிய துயரம், நாடு பாசிசத்தின் ஆக்டோபஸ் கரங்களால் நெறிக்கப்படுவது ஆகும். இத்தகைய சர்வாதிகாரப் போக்குகளை மக்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்” என்று அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios