காவிரி மேலாண்மை அமைக்காமல் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்வதை கண்டித்தும் தமிழகத்தில் நீர் இல்லாமல் வாடும் விவசாயத்தை பாதுகாக்கவும் அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்ட அக் 17,18 ரயில் மறியல் போராட்டத்தில் சில கட்சிகள் தவிர தமிழகத்தின் அனைத்து எதிர்கட்சிகளும் கலந்துகொண்டன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நேற்று நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் மு.க.ஸ்டாலின், வைகோ, வாசன், ஜி.ராமாகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டு கைதாகினர்.

தமிழகம் முழுதும் 27 ஆயிரம் பேர் கைதானார்கள். 48 மணி நேர தொடர் மறியல் என்பதால் இன்று ரயில் மறியல் தமிழகம் முழுதும் நடந்தது. சென்னையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் வைகோ, திருமாவளவன் தலைமையில் ஊர்வலமாக வந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். 

அவர்களை போலீசார் தடுப்பு வேலி அமைத்து தடுத்தனர். அவர்களுடன் வைகோ வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் வைகோவே நேரடியாக தடுப்பு வேலியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார். அங்கு தண்டவாளத்தில் அமர்ந்து வைகோவும் , திருமாவளவனும் மக்கள் நலக்கூட்டணியின் தொண்டர்களும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயற்சித்தனர். அப்போது போலீசாருடன் வைகோ வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எழும்பூர் ரயில் நிலைய 4 வது நடைமேடையில் அமைந்துள்ள தண்டவாளத்தில் அமர்ந்து கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.