வன்முறையால் என்னை பயமுறுத்த முடியாது என பாஜகவினருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். மோடி மதுரை வந்த போது கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் வைகோ. இதனையடுத்து வைகோ செல்லும் இடங்களில் பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ‘’கஜா புயலால் உயிர் இழந்தவர்களுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காத மனிதாபிமானம் அற்றவர் மோடி. மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுத்தவர். காவிரியில் பாசனம் செய்ய முடியாத அளவுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி கொடுத்தவர்.

இப்படி தமிழகத்திற்கு மன்னிக்க முடியாத மாபெரும் துரோகம் செய்த பச்சை துரோகி மோடி. ஒரு மாநிலத்துக்கு இவ்வளவு துரோகம் செய்த ஒரு பிரதமர் அந்த மாநிலத்துக்கு வரும்போது மக்கள் கொந்தளிக்காமல் அமைதியாக இருக்கின்றனர். தமிழகத்தில் இந்துத்துவா செய்பவர்கள் வாலாட்ட முடியாது. கடந்த 25 வருடத்துக்கு முன்பு இவர்கள் யாரும் இங்கு இல்லை. இப்போது இங்கே அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றால் மத்திய அரசு கொடுக்கும் தைரியம் மற்றும் மாநில அரசு கொடுக்கும் இடம்.

நான் கருப்புக்கொடி காட்டும்போது பா.ஜனதாவினர் ஒரு பெண்ணை தயார் செய்து எங்களது கூட்டத்தில் பிரச்சினை செய்தார்கள். எங்களது கூட்டத்தில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. பா.ஜனதாவினர் வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையை வைத்து என்னை யாரும் பயமுறுத்த முடியாது. ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற இந்துத்துவாவின் கொள்கை. நாட்டை அழிக்கின்ற செயல்.

நான் துப்பாக்கிக்கு உரிமம் கேட்டு காவல் துறையில் விண்ணப்பித்தேன். ஆனால், என் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக கூறி காவல் ஆணையர் விஸ்வநாதன் உரிமம் தர மறுத்து விட்டார். எனக்கு மனதில் துளி அளவும் பயம் கிடையாது’’ என அவர் தெரிவித்தார்.