Asianet News TamilAsianet News Tamil

வாஜ்வாய் பற்றிய யாருக்கும் தெரியாத உண்மையை சொன்ன வைகோ... உருக்கமான இரங்கல்...

ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது! என வைகோ இரங்கல்

Vaiko say, unparalleled democratic democracy disappeared
Author
Delhi, First Published Aug 16, 2018, 8:06 PM IST

இந்திய நாட்டின் அரசியல் வரலாற்றில் அழியாப் புகழ் படைத்த ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளியும் கோடானு கோடி மக்களின் இதயத்தில் இடம்பெற்றவருமான மாபெரும் தலைவர் அடல்பிகாரி வாஜ்பாய் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாய் என்னை தாக்கியது. நிலைகுலைந்தேன்; உள்ளம் உடைந்தேன.

நாற்பது ஆண்டுகளாக அவரிடம் நெருங்கிப் பழகி, என் தகுதிக்கு மீறிய அன்பை அவரிடமிருந்து பெற்றவன் நான்.

இந்தியிலும், ஆங்கிலத்திலும் அற்புதமாக உரையாற்றக் கூடியவர். ஜனசங்கத்தைக் கட்டிக் காத்த தலைவர்களில் ஒருவர். தலைசிறந்த கவிஞர், நகைச்சுவை உணர்வு மிக்கவர். வங்கதேச யுத்த வெற்றிக்குப் பின், பிரதமர் இந்திராகாந்தியை நாடாளுமன்றத்தில் “துர்காதேவியே, வெற்றித் தேவைதையே” என வாழ்த்தியவர்.

இந்தியாவின் அனைத்துத் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர். பேரறிஞர் அண்ணா அவர்களிடம் மிக்க அன்பு காட்டியவர். டெல்லியில் பெரியார் மையம் இடிக்கப்பட்டபோது, அண்ணன் வீரமணியுடன் சென்று நான் வாதாடியபோது, மீண்டும் பெரியார் மையம் எழுப்ப உன்னதமான ஒரு இடத்தை வழங்கினார்.

Vaiko say, unparalleled democratic democracy disappeared

நெருக்கடி நிலை காலத்தில் 18 மாதம் பெங்களூர் சிறையில் வாடினார்.

1998, 1999 லிருந்து 2004 வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு தலைமையேற்றபோது, அக்கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் மதித்து அரவணைத்து கருத்துக்களைப் பரிமாறி, ஒரு கூட்டணி ஆட்சி எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தார்.

1998 செப்டம்பர் 15 இல், பெரியார் - அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டை சென்னை கடற்கரையில் மதிமுக நடத்தியபோது, என் கோரிக்கையை ஏற்று, “சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும்” என்று பிரகடனம் செய்தார்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை மைய அரசு தனியார் மயமாக்க முடிவெடுத்த பின்னர், எளியேனின் வேண்டுகோளை ஏற்று, அந்த முடிவை இரத்து செய்ததை நினைக்கும்போதே என் கண்கள் குளமாகின்றன.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு தன் வேதனையையும், எதிர்ப்பையும் நாடாளுமன்றத்திலேயே பதிவு செய்தார். ஈழத்தமிழர் பிரச்சினையில் மாநிலங்கள் அவையில் நான் உரையாற்றியபோதெல்லாம் என்னை அவர் ஆதரித்துப் பேசியதை மறக்க முடியுமா?

1999 ஆம் ஆண்டில் அனைத்துக் கட்சி நாடாளுமன்றத் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, அதில் “இலங்கை அரசுக்கு எவ்விதத்திலும் இந்திய அரசு உதவி செய்யாது; ஆயுதங்களை சிங்கள அரசுக்கு ஒருபோதும் விற்பனை செய்யாது” என்று கொள்கை முடிவை அறிவித்தார்.

நானும், சகாக்களும் பொடா கைதிகளாக சிறையில் இருந்தபோது, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது பொடா சட்டப்பபடி குற்றம் ஆகாது என்று இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் உச்சநீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யுமாறு நடவடிக்கை எடுத்தவர் அடல்ஜி என்பதை நன்கு அறிவேன்.

டெல்லியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டங்களில் என் தகுதிக்கு மீறி மற்றவர்கள் உரையாற்றியதற்குப் பின்னர் என்னை உரையாற்ற வைத்து ரசித்துப் பாராட்டியதை எப்படி மறப்பேன்?

தன் வாழ்வையே நாட்டுக்காக, கோடானு கோடி மக்களுக்காக அர்ப்பணித்து, தனக்கென்று ஒரு இல்லற வாழ்வை அமைத்துக்கொள்ளாத உத்தமத் தியாகி ஆவார்.

அவர் பிரதமராக இருந்தபோது, ஈழத்தமிழர்களுக்கு செய்த பல உதவிகளை நான் நன்கு அறிவேன். ஆண்டன் பாலசிங்கத்தை இந்தியாவுக்கு வரவழைத்து சிகிச்சை தருவதற்கும் தயாரானார். அந்தச் செய்தியை நான் சேர்ப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் பாலசிங்கம் கிளிநொச்சியை விட்டு சிங்கப்பூர் சென்றுவிட்டார்.

அவருடைய முழங்கால் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பின் டெல்லியில் அவர் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி என் மகள் கண்ணகியின் திருமண வரவேற்பாகும்.

இந்தியா ஒரு அணு ஆயுத வல்லரசு என்பதை பொக்ரான் சோதனையின் மூலம் உலகத்துக்கு நிருபித்தார்.

இந்தியாவின் சாலை கட்டமைப்பை வலுப்படுத்த நாடு முழுக்க தங்க நாற்கரச் சாலைக்கு காரணமானார்.

கடந்த எட்டாண்டு காலமாக அவர் நினைவு குறைந்து படுத்த படுக்கையானபின், நான் டெல்லிக்குச் செல்லும்போதெல்லாம் அவரது இல்லத்துக்குச் சென்று, அவரது படுக்கையின் அருகில் நின்று, கரம்கூப்பி வணங்கிவிட்டு பொங்கும் விழிநீரைத் துடைத்துக்கொண்டு வருவேன். முதல் இரண்டு ஆண்டுகளில் நான் அருகில் சென்றால் திக்கித் திக்கி என் பெயரை உச்சரிக்க முனைவதும், அவர் முகத்தில் பரவசம் பரவுவதையும் அங்கு இருப்பவர்களே சொல்லி வியந்தார்கள்.

“வைகோவை என் மகனாகவே கருதுகிறேன்” என்று கூறுகிற அளவுக்கு அம்மாமனிதரின் உள்ளத்தில் எனக்கு ஒரு இடம் கிடைத்தது என் வாழ்வில் கிடைத்தற்கரிய பேறாகும்.

இந்திய அரசியலில் பேரொளியாய் பிரகாசித்த ஜனநாயச் சுடர் அனைந்துவிட்டது; துக்கம் தாங்கமுடியாமல் தவிக்கிறேன். துயர் சூழ்ந்துள்ள வேளையில் தலைவர் அடல்ஜி அவர்களின் வளர்ப்பு மகள் நமிதா அவர்களுக்கும், அவரது கணவர் ரஞ்சன் பட்டாச்சார்யா அவர்களுக்கும், அவர்களின் புதல்விக்கும், உற்றார் உறவினர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சி நண்பர்களுக்கும், அத்தலைவரை மதித்து நேசித்த கோடானு கோடி மக்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன்.

Follow Us:
Download App:
  • android
  • ios