காஞ்சி சங்கரமடம் ஆன்மிக அமைப்பாக இருந்தாலும் கூட தமிழக மற்றும் தேசிய அரசியலில் அவ்வப்போது சில பங்களிப்பை வழங்குவது உண்டு. அதிலும் தற்போதைய சங்கராச்சாரியால் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அரசியல் மீது அதீத பற்று கொண்டவர். மேலும் தமிழகத்தில் பாஜக போன்ற இந்து சமய சார்புடைய இயக்கங்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று நீண்ட நாட்களாக குரல் கொடுத்து வருபவர். சமீபத்தில் கூட சங்கராச்சாரியார் அரசியல் கருத்துகள் கூற ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் தான் காஞ்சி சங்கரமடத்தில் அரசியல் சார்ந்த கூட்டம் நடைபெற்றதாக கூறுகிறார்கள். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் திமுகவை பலவீனப்படுத்தும் அளவிலான கூட்டணி அல்லது ஒரு செயல்திட்டத்தை உருவாக்குவது தான் சங்கராச்சாரியார் ஏற்பாடு செய்த கூட்டத்தின் நோக்கம் என்கிறார்கள். அதாவது திமுக மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்கான செயல்திட்டத்தை உருவாக்குவது தான் என்று கூறப்படுகிறது.

இதன் முதல் கட்டமாக கடந்த தேர்தலை போலவே தமிழகத்தில் 3வது அணி ஒன்றை உருவாக்கி நடுநிலையாளர்கள் மற்றும் எந்த கட்சியையும் சாராத வாக்காளர்களின் வாக்குகளை பிரிக்கும் செயல்திட்டம் தயாராகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த செயல்திட்டத்தின் படி கடந்த முறையை போலவே மக்கள் நலக்கூட்டணி போன்று ஏதேனும் ஒரு 3வது அணி அமையும் என்று கூறப்படுகிறது. அந்த அணிக்கான ஆட்கள் சேர்ப்பை தான் காஞ்சி சங்கரமடம் முன்னின்று நடத்துவவதாக சொல்கிறார்கள். அந்த வகையில் முதற்கட்டமாக கடந்த முறை மக்கள் நலக்கூட்டணியில் முக்கிய இடம் வகித்த வைகோவை மீண்டும் அணுகியதாக சொல்கிறார்கள். முதற்கட்டமாக திமுக கூட்டணியை உடைக்கும் வேலையை ஆரம்பிக்க உள்ளதாகவும் அதை வைகோவிடம் இருந்து தொடங்கலாம் என்பது தான் திட்டம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே திமுக கூட்டணியில் நாடாளுமன் ற தேர்தல் சமயத்திலேயே மதிமுகவிற்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை. தேர்தலுக்கு பிறகு மாநிலங்களை எம்பி பதவி கொடுத்தாலும் கூட சட்டமன்ற தேர்தலில் 4 தொகுதிகளுக்கு மேல் மதிமுகவிற்கு கொடுக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.

எனவே வைகோவை இதை காரணமாக வைத்து திமுக கூட்டணியில் இருந்து கழட்டிவிடலாம் என்று கணக்கு போட்டதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து பேசவே சங்கரமடத்தில் இருந்து வைகோவுக்கு அழைப்பு சென்றதாகவும், வைகோவும் இரவோடு இரவாக சங்கரமடம் சென்று சங்கராச்சாரியாரை சந்தித்து திரும்பியதாகவும் கூறுகிறார்கள். சந்திப்பின் போது பிரபல ஆடிட்டர் ஒருவர் இருந்ததாகவும் சங்கரமட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதே சமயம் இதில் எந்த திட்டமும் இல்லை, வைகோ அவ்வப்போது சங்கரமடம் சென்று அரசியல் ஆலோசனைகள் வழங்குவார் மற்றும் பெறுவார் என்பதால் இது வழக்கமான சந்திப்பு தான் என்றும் கூறிக் கொள்கிறார்கள்.