மதிமுக பொது செயலாளர் வைகோ மீது கடந்த 2009ம் ஆண்டு தேச துரோக வழக்கு தொடரப்பட்டது. கடந்த மாதம் இந்த வழக்கின் விசாரணை, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்தது.

அப்போது, இவ்வழக்கில் ஆஜரான வைகோவை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ஜாமீனில் செல்ல விரும்பினால், வெளியே செல்லலாம் என கூறினார். 

அதற்கு, மறுப்பு தெரிவித்த வைகோ, சிறைக்கு செல்வதாக கூறினார். இதையடுத்து அவர், புழல் மத்திய சிறைச்சலையில் அழைத்து செல்லப்பட்டார்.

இதை தொடர்ந்து கடந்த 2 வாரங்களுக்கு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வைகோவை மேலும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை எழும்பூர் 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி நசிமா பானு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வரும் மே 2ம் தேதி வரை, வைகோவின் நீதிமன்ற காவலை நீடித்து உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவர் புழல் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

முன்னதாக தனது பாஸ்போர்ட் புதுப்பிக்க வேண்டும் என்றும், தன் மீது குற்ற வழக்கு உள்ளதால், பாஸ்போர்ட் புதுப்பிக்க அதிகாரிகள் மறுப்பதாக வைகோ நீதிபதியிடம் கூறினார். அதற்கு அவரது பாஸ்போர்ட்டை புதுப்பித்து தரும்படி அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.