vaiko praises sengottayan after releasing from puzhal
பள்ளிக்கல்வித் துறையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதால் மாணவர்களின் நெருக்கடிகள் குறைக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செங்கோட்டையனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு நிகராக தமிழக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் எனவும் நடப்பாண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று முன்தினம் அரசாணை வெளியிட்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளிக்கல்வித்துறையில் பல மாற்றங்கள் கொண்டுவருவதாக அறிவித்தார்.

மாணவர்களின் நலன் கருதி பிளஸ் 2 பொதுத்தேர்வில் பாடங்களுக்கான மதிப்பெண்ணை 200-ல் இருந்து 100 ஆக குறைக்கப்படுவதாகவும், இதனால் ஒட்டுமொத்த மதிப்பெண் 1200-ல் இருந்து 600 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், பிளஸ் 1 வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு இரண்டையும் இணைத்து ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் எனவும், பிளஸ் 1 தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன், ஜூலை மாதங்களில் நடக்கும் இடைத் தேர்வில் தேர்வை எழுதலாம் என தெரிவித்தார்.
உலக அளவில் நடக்கும் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கேற்ப பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும். புதிய பாடத்திட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு கையேடுகள் வழங்கப்படும் என குறிப்பிட்டார்.
இந்நிலையில், தேச துரோக வழக்கில் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி சிறைக்கு சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று ஜாமினில் வெளியே வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேட்டியளித்த வைகோ, பள்ளிக்கல்வித் துறையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதால் மாணவர்களின் நெருக்கடிகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் செங்கோட்டையன் மேலும் பல நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும் எனவும் புகழாரம் சூட்டினார்.
