குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடும் மாணவர்களை வன்முறையாளர்கள் என்று சித்தரிப்பதும் மாணவர்களை வழிநடத்துபவர்கள் சரியான தலைவர்கள் இல்லை என்று மறைமுகமாக எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்திருப்பதும் ஏற்றுக்கொள்ளவே முடியாத கண்டனத்துக்கு உரியது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்ச்சி ஒன்றில் பேசிய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், அரசியல் கருத்துகளைத் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளைக் குற்றம் கூறி ராணுவ தளபதி பேசிய அரசியல் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ராணுவ தளபதிக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் வெடித்துள்ளன. குறிப்பாக பல்கலைக் கழக மாணவர்களும், இளைஞர்களும் லட்சக்கணக்கில் வீதிக்கு வந்து போராடுகிற நிலைமை உருவாகி இருக்கிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடுபவர்கள் மீது பல இடங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 22 பேர் உயிர் இழந்திருக்கின்றனர். இந்நிலையில், இந்தப் போராட்டங்கள் குறித்து இந்திய இராணுவத் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் பிபின் ராவத், “மக்களைத் தவறான பாதையில் வழிநடத்துபவர்கள் தலைவர்கள் அல்ல, ஏராளமான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் தலைமையேற்று நடத்தும் போராட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவதை நாம் பார்த்து வருகிறோம். இது சரியான தலைமை அல்ல” என்று கூறி இருக்கிறார்.
விடுதலை பெற்ற இந்தியாவின் 70 ஆண்டு கால வரலாற்றில் ராணுவத் தளபதி ஒருவர் உள்நாட்டுப் பிரச்சினை, அரசியல் விவகாரங்களில் தலையிட்டதோ, கருத்துக் கூறியதோ இல்லை. ஆனால், தற்போது இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடும் மாணவர்களை வன்முறையாளர்கள் என்று சித்தரிப்பதும் மாணவர்களை வழிநடத்துபவர்கள் சரியான தலைவர்கள் இல்லை என்று மறைமுகமாக எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்திருப்பதும் ஏற்றுக்கொள்ளவே முடியாத கண்டனத்துக்கு உரியதாகும்.


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைமைத் தளபதியை நியமனம் செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. முப்படைகளையும் கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் தலைமைக்கு கட்டுப்பாடற்ற அதிகாரத்தை வழங்குவது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஐயப்பாடுகளை எழுப்பி உள்ளது. இந்நிலையில், ஜனநாயக நாட்டில் ராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அரசியல் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிப்பது ஆபத்தான விளைவை ஏற்படுத்தும்.
சீருடைப் பணியாளர்கள், சீருடை உயர் அலுவலர்களுக்கு என்று அரசு வகுத்துள்ள விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் மரபையும் மீறி கருத்துத் தெரிவித்துள்ள ராணுவத் தலைமைத் தளபதி உடனடியாக மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.” என்று வைகோ தெரிவித்துள்ளார்.