தி.மு.க தலைவர் கருணாநிதியை இன்று அவரது இல்லத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கருணாநிதிக்கு அண்மையில், உணவு குழாய் மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சில மணி நேரத்துக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார்.

கடந்த ஜுன் மாதம் கருணாநிதியின் பிறந்த நாள் மற்றும் சட்டப்பேரவையில் அவரது வைரவிழா ஆகியவை பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில், நாட்டின் முக்கிய கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆனால், உடல்நிலை ஒத்துழைக்காததால் விழாவில் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் வீட்டில் ஓய்வுவெடுத்துவரும் கருணாநிதியை, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நேரில் சந்தித்து விசாரித்து வருகின்றனர்.

கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அவரை சந்தித்து உடல் நலம் விசாரிக்க வைகோ சென்றார். அப்போது தி.மு.க. தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வைகோ கருணாநிதியை சந்திக்காமல் திரும்பி விட்டார்.

தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையில், திமுகவுக்கு இணக்கமான போக்கை வைகோவும், வைகோவுக்கு திமுகவும் குரல் கொடுத்து வரும் நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை இன்று வைகோ சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டரை வருடங்களுக்குப் பிறகு, கருணாநிதியை வைகோ இன்று சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.