vaiko meets jaitley regarding farmer protest
மதிமுக பொது செயலளர் வைகோ, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை டெல்லியில் சந்தித்தார். அப்போது தமிழக விவசாயிகள் சார்பில், மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது.
தமிழகத்தில், 400 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கடுமையான வறட்சியினால் தமிழகத்தில் டெல்டா பகுதியில் மட்டும் 29 லட்சம் ஏக்கர் பாசனம் இழந்துவிட்டது. மொத்தத்தில் ஒரு கோடி ஏக்கர் விவசாயம் பாழாகிவிட்டது.
நதிநீர்ப் பிரச்சினைகளில் தமிழகத்திற்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை. கர்நாடகம், கேரளம், ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்கள் தமிழகத்தை வஞ்சித்து வருகின்றன. ‘காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையைக் கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை.
2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், வரலாறு காணாத அளவிற்கு தமிழகத்தை தாக்கிய வர்தா புயலால் விளைந்த பெரும் சேதத்தை ஈடுகட்டுவதற்காகவும், மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் தமிழக அரசு கோரிய அளவிற்கு போதுமான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை.
கோடிக்கணக்கான தமிழக விவசாயிகளின் சார்பில், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி கொண்டு இருக்கின்றார்கள்.
திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் அய்யாக்கண்ணு, தமிழகத்தில் இருந்து விவசாயிகளை திரட்டி வந்து இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தி கொண்டிருக்கிறார்.

இப்போராட்டத்தின் முக்கியக் கோரிக்கைகள், 1. தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகளிடம் விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். 2. தமிழ்நாடு அரசு கோரிய வறட்சி நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
3. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். 4. தென்னக நதிகள் இணைப்புக்கு உடனே நடவடிக்கை வேண்டும்.

தமிழகம் தொடர்ந்து மத்திய அரசால் புறக்கணிக்கப்படுவதால், தமிழக விவசாயிகள் இடையே மத்திய அரசு மீது வெறுப்பும் வேதனையும் ஏற்பட்டு இருக்கின்றது.
எனவே, வறட்சி நிவாரணப் பணிகளுக்குக் கூடுதல் நிதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என கூறப்பட்டுள்ளது.
