vaiko meet thinakaran

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அந்தவகையில் கடந்த இரண்டு நாள்களாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றார். மேலும் தினகரன் தன் கட்சியின் சார்பில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரமும் நிவாரணத்தை வாரி வழங்கி வருகிறார்.

இன்று நெல்லையில் இருந்து திருக்குறுங்குடி கெஸ்ட் ஹவுஸுக்கு தினகரன் பயணமாகிக்கொண்டிருந்தார். அதேவேளையில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நாங்குநேரியில் நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, நெல்லை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, நாங்குநேரி நான்குவழிச்சாலை அருகே இருவரின் காரும் நிறுத்தப்பட்டு வைகோவும், தினகரனும் சந்தித்துப் பேசினர். சுமார் 10 நிமிடம் நீண்ட இந்தச் சந்திப்பில், இருவரும் பரஸ்பர நலம் விசாரித்துக்கொண்டதோடு ஸ்டெர்லைட் விவகாரம், தமிழக அரசின் இந்தப் போக்கு குறித்துப் பேசினர் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இருவரின் சந்திப்பும் தமிழக அரசியலில் தற்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.