தமிழகத்தில் இருந்து நாடாளுமன்ற ராஜ்யசபாவுக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வருகிற 18-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் அதிமுக சார்பில் 3 எம்.பி.க்களையும், தி.மு.க. சார்பில் 3 எம்.பி.க்களையும் போட்டியின்றி எளிதாக தேர்வு செய்ய முடியும். அதிமுக சார்பில் பாமகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது. அந்த இடம் அன்புமணிக்கு வழங்கப்படுகிறது. திமுகவில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு 1 இடம் தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மதிமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார்? என்பதை முடிவு செய்ய எழும்பூர் தாயகத்தில் இன்று கட்சியின் உயர் மட்ட குழு கூட்டம் வைகோ தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதிமுக வேட்பாளராக பொதுச்செயலாளர் வைகோ போட்டியிட ஒரு மனதாக முடிவுசெய்யப்பட்டு உள்ளது. ஆனால் 2009-ம் ஆண்டு வைகோ பேசிய பேச்சு இன்று அவருக்கு சட்ட சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போரில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசில் அங்கம் வகித்த காங்கிரஸ்- தி.மு.க.வுக்கு எதிராகவும் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங்குக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற நூல் வெளியீட்டு விழா 2009-ம் ஆண்டு எழும்பூர் ராணி சீதை அரங்கில் நடைபெற்றது. இதில் வைகோ பங்கேற்று ஆவேசமாக பேசினார்.

அவரது பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக கூறி தேசதுரோக வழக்கு தி.மு.க. ஆட்சியில் தொடரப்பட்டது. வெகு நாட்களாக நடைபெற்ற இந்த வழக்கை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வைகோ முறையிட்டார். ஆனால் வழக்கை ‘டிஸ்மிஸ்’ செய்ய முடியாது என்று ஐகோர்ட்டு அறிவித்து விட்டது. அதன்பிறகு இந்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு வருகிற 5-ந் தேதி வெளியாகிறது. இதில் வைகோ விடுதலையாகி விட்டால் எந்த பிரச்சினையும் இருக்காது. மாறாக வைகோவுக்கு 2 ஆண்டுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் அவரால் எம்.பி. பதவிக்கு நிற்க முடியாது.
இதனால் வைகோ எம்.பி.யாக முடியுமா? முடியாதா? என்பது 5-ந் தேதி தீர்ப்புக்கு பிறகு தெரிய வரும்.