ஆமக்கறி சாப்பிட்டேன், ஆயுதப்பயிற்சி எடுத்தேன் என்று சிலர் கூறுவது எல்லாம் டுபாக்கூர் வேலை என்றும், ஈழவிடுதலையைப் பற்றி பேச வைகோவுக்கு மட்டுமே தகுதி உள்ளது என்றும் கிராமிய இசைக்கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி கூறினார்.

மதிமுக பொது செயலாளர் வைகோவுக்கும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே கடுமையான வார்த்தை மோதல்கள் இருந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினருக்கும் மதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

தமிழ்த்தேசிய அரசியலை நீண்டகாலமாகவே தமிழகத்தில் முன்னெடுத்து வருபவர் மதிமுக பொது செயலாளர் வைகோ. தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன், அவர்களை நேரடியாக ஈழம் சென்று சந்தித்து வந்ததுடன், நான் எப்போதும் புலிகளின் ஆதரவாளன் என்று வெளிப்படையாக கூறி வருபவர் வைகோ.

இது குறித்து நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைத்தளங்களிலும், பொது வெளியிலும் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன் வைத்து வந்தனர். அதற்கு, வைகோவும் கடுமையாகவே பதிலளித்து வந்தார். வைகோ - சீமான் அவர்களுக்குள் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், சீமான் ஆமக்கறி சாப்பிட்டதாக கூறுவதும், ஆயுதப் பயிற்சி எடுத்ததாக சொல்வது எல்லாம் டுபாக்கூர் என்று கிராமிய இசைக்கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி கூறியுள்ளார்.

கிராமிய இசை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய புஷ்பவனம் குப்புசாமி, விடுதலைப்புலிகளுக்காக வெளிநாடுகளில் 300 கோடி ரூபாய் புரட்டியவர் வைகோ. அந்த 300 கோடி பணத்தை விடுதலைப் புலிகளிடம் கொடுத்தது நான். வைகோ ஐயாவுக்கு மட்டும்தான் ஈழவிடுதலையைப் பற்றி பேச தகுதி உள்ளது. ஆமக்கறி சாப்பிட்டேன், ஆயுதபயிற்சி எடுத்தேன் என்று சிலர் கூறுவது எல்லாம் டுபாக்கூர் வேலை என்று புஷ்பவனம் குப்புசாமி கூறினார்.