சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை-2020 திருத்த வரைவு அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:- சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டம்-1986 இன் கீழ், இந்தியாவில் செயல்படுத்தப்படும் 50 கோடி ரூபாய்க்கு அதிகமான முதலீடுகள் கொண்ட பெருந்திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை (Environmental Impact Assessment-EIA) கட்டாயமாகும். 1994 ஜனவரி 27 இல் வெளியிடப்பட்ட குறிப்பாணைப்படி, சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை சட்ட ரீதியாகக் கட்டாயமாகும்.பா.ஜ.க. அரசு 2014 இல் பொறுப்பு ஏற்றதிலிருந்து செயல்படுத்த முனைந்துள்ள திட்டங்கள் சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிப்பதாகவும், இயற்கை சமனிலையைச் சீர்குலைப்பதாகவும் இருப்பதால், சூழலியல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். வளர்ச்சியின் பெயரால் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் பெரும் நிறுவனங்களுக்குத்தான் பயனளிக்கின்றன. பா.ஜ.க. அரசு தமது விருப்பம் போலத் திட்டங்களைச் செயல்படுத்த சுற்றுச் சூழல் சட்டமும், விதிமுறைகளும் தடையாக இருப்பதால் அவற்றை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், சுற்றுச் சூழல் சட்டத்தின் விதிமுறைகளை மாற்றுவதற்கு முனைந்துள்ளது. 

சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை (EIA) என்பது புதிதாகத் தொடங்கப்பட இருக்கும் தொழில்கள், திட்டங்கள், அவற்றின் கட்டமைப்புகள் ஆகியவற்றால் ஏற்படும் தாக்கங்களையும், விளைவுகளையும் முன்னறிவிக்கும் ஆய்வு அறிக்கையாகும்.நடைமுறையில் உள்ள சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை தொடர்பான விதிமுறைகள்-2006 இல் சில திருத்தங்களைச் செய்து (எஸ்.ஓ. 1119(இ)2020) கடந்த மார்ச் 23 ஆம் தேதி ஒரு வரைவு அறிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு தயாரித்து, ஏப்ரல் 11, 2020 இல் அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.மேற்கண்ட வரைவு அறிக்கை அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம்.

மாநில அரசுகள் தங்களது கருத்துகளை அளிக்கலாம் என்று மத்திய சூற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கூறி இருந்தது. கொரோனா தீநுண்மி பாதிப்பால் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை மீதான மக்கள் கருத்தினைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30, 2020 வரை நீட்டிக்கப்பட்டது. இதனிடையே டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை சட்டத் திருத்த விதிகள் வரைவு அறிவிக்கை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், 22 மொழிகளில் இதனை மொழிபெயர்த்து, 10 நாட்களுக்குள் மத்தியச் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட வேண்டும் என்றும், ஆகஸ்டு 11, 2020 வரையில் பொதுமக்கள் கருத்துகளைக் கேட்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆனால் தற்போது 25 நாட்கள் கடந்தும், மத்திய அரசு மொழிபெயர்க்கப்பட்ட அறிவிக்கையை வெளியிடாமல் கள்ள மௌனம் சாதிப்பது ஏன்?சுற்றுப்புறச் சூழல் தாக்க வரைவு அறிவிக்கை 2020, ஏற்கனவே உள்ள விதிமுறைகளில் மூன்று முக்கியமான திருத்தங்களை முன்மொழிந்திருக்கிறது.முதலாவதாக சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை இல்லாமலே ஒரு திட்டத்தைத் தொடங்கவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டத்தை விரிவாக்கம் செய்யவும் அனுமதி அளிக்கிறது. உச்சநீதிமன்றத்தை ஒரு பொருட்டாகக் கருதாத பா.ஜ.க. அரசு, மேற்கண்ட திருத்தத்தை முன்மொழிந்துள்ளது. இரண்டாவதாக குறிப்பிட்ட சில திட்டங்களுக்கு அது செயல்படுத்தப்படும் பகுதிகளில் வாழும் மக்களிடம் கருத்துக் கேட்கத் தேவை இல்லை.  மற்றத் திட்டங்களுக்கு பொதுமக்களின் கருத்துகளைத் தெரிவிப்பதற்காக வழங்கப்பட்டு வரும் காலஅவகாசம் 30 நாட்களிலிருந்து, 20 நாட்களாகக் குறைக்கப்படும். இத்திருத்த விதியின் கீழ் எந்த வரையறையும் இல்லாததால், அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்துவதற்கான ஏற்பாடு இது என்பது தெரிகிறது. மூன்றாவதாக நாட்டின் பாதுகாப்பு, சுரங்கம், கனிமவளத் திட்டங்கள் உள்ளிட்ட முகாமையான திட்டங்களுக்குச் சுற்றுச் சூழல் தாக்கமதிப்பீட்டு அறிக்கையிலிருந்து முழுமையான விலக்கு அளிக்கப்படுகிறது. 

மேற்கண்ட மூன்று திருத்தங்கள் மூலம் மத்திய அரசு விரும்புகின்ற எந்தத் திட்டத்தையும், எந்த மாநிலங்களிலும் எத்தகைய அனுமதி இன்றியும் செயல்படுத்தலாம். இத்தகைய வரைவு அறிக்கையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தற்போது சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய 191 திட்டங்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசு அனமதி அளித்து இருக்கிறது. தமிழ்நாட்டில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், நியூட்ரினோ ஆய்வகம், சேலம் - சென்னை எட்டுவழி பசுமைச் சாலை, இரசாயன முதலீட்டு மண்டலம் மற்றும் நாசகார ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவது ஆகியவற்றைச் செயல்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு முனைந்திருப்பதால், சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை-2020 திருத்த வரைவு அறிக்கையால் தமிழ்நாட்டிற்கு முற்றிலும் பேராபத்துதான் விளையும். எனவே தமிழக அரசு இதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து, தமிழ்நாட்டில் நாசகார திட்டங்களைச் செயல்படுத்த அனுமதிக்க முடியாது என்பதைத் திட்டவட்டமாகப் பிரகடனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.