சாகும் வரை நானும் வைகோவும் நண்பர்களாக இருப்போம் என்று தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கூறிய போது ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண் கலங்கினார். ம.தி.மு.கவின் முப்பெரும் விழா மற்றும மாநாடு ஈரோடு அருகே நடைபெற்றது. இந்த விழாவில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் பங்கேற்றார். மேடையில் தி.மு.கவின் முன்னாள் தலைவர் கலைஞரின் உருவப்படத்தை துரைமுருகன் முதலில் திறந்து வைத்தார். 

பின்னர் விழா மேடையில் துரைமுருகன் பேசியதாவது:- நானும் வைகோவும் கல்லூரிக் கால நண்பர்கள். இருவரும் சென்னை சட்டக்கல்லூரியில் ஒன்றாக படித்தோம். சட்டக்கல்லூரி காலம் தொட்டே எனக்கும் வைகோவுக்கும் நெருக்கமான நட்பு உண்டு. 

விடுமுறை நாட்களில் வைகோ வீட்டிற்கு நானும் நண்பர்களும் செல்வோம். அப்போது வைகோ வீட்டில் உள்ளவர்கள் எங்களை கவனித்துக் கொள்வது தற்போதும் நினைவில் உள்ளது. வைகோ மிகப்பெரிய சாப்பாட்டு ராமன். ஹாஸ்டலில் வைகோவிற்கு அருகே அமர்ந்தால் எங்களுக்கு பூரியே கிடைக்காது. ஏனென்றால் பூரியை பரிமாற பரிமாற வைகோ காலி செய்துக் கொண்டே இருப்பார். 

அவர் சாப்பிட்டு எழும் போது மிச்சம் இருந்தால் தான் எங்களுக்கு பூரி கிடைக்கும். மேலும் தி.மு.கவில் இருந்து வைகோ பிரிந்த போதும் எங்களுக்குள் நட்பு தொடர்ந்தது. எதிரும் புதிருமாக இருந்த கால கட்டத்தில் வைகோவை நான் மிக கடுமையாக விமர்சித்துள்ளேன். ஆனால் வைகோ ஒரு நாளும் என்னை விமர்சித்தது இல்லை. இதனால் தான் வைகோ நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்று கூறுகிறேன். 

ம.தி.மு.கவை துவங்கிய பிறகு வைகோ முதல் நிகழ்ச்சியாக வேலூரில் எனது தொகுதியான காட்பாடிக்கு தான் கொடியேற்ற வருகை தந்தார். அப்போது வைகோ என்னை விமர்சித்து கடுமையாக பேசுவார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் வந்தவர் நான் எப்படி இருக்கிறேன் என்றே அனைவரிடமும் விசாரித்துள்ளார்.  

எங்களுக்கு இடையிலான நட்பு தொடர்ந்து நீடிக்கும். நான் சாகும் வரை வைகோவுடன் நட்பு பாராட்டுவேன். எங்கள் நட்பு நீடிக்கும். என்று துரைமுருகன் பேச்சை முடித்தார். அப்போது வைகோஅருகில் வந்த துரைமுருகன் கைகளை பிடித்துக் கொண்டு கண் கலங்கினார். அருகில் இருந்தவர்கள் வைகோவை சமாதானம் செய்தனர்.