சென்னை ஐஐடி-யில் மத்திய அரசு சார்பில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக மகா கணபதி பாடல் சமஸ்கிருத மொழியில் பாடப்பட்டது.

இந்த விவகாரம் தமிழக அரசியல் கட்சிகளிடையேயும் மக்களிடையேயும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்தியையும் சமஸ்கிருதத்தையும் தமிழ்நாட்டில் திணிக்க மத்திய பாஜக அரசு முயல்கிறது. கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி இந்தியாவை சீரழித்துவிட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டுகிறார். ஆனால், முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் தமிழகத்திற்கு வந்தபோது இந்தியில் பேசியதில்லை. ஆனால் பிரதமர் மோடி, தமிழகத்திலும் புதுச்சேரியிலும் இந்தியிலேயே பேசினார்.

இப்போது, ஐஐடியில் சமஸ்கிருத பாடல் ஒலிபரப்பப்பட்டுள்ளது. இது அரசியலைக் கடந்து தமிழர்களின் தன்மானத்துக்கு விடப்பட்ட சவால். மான உணர்வுள்ள தமிழர்கள் வெகுண்டெழ வேண்டும். ஐஐடி விழாவில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். இல்லையேல் விளைவுகள் கடுமையாக இருக்கும் என வைகோ எச்சரித்தார்.