ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய 13 பேரை ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டு காவு வாங்கிய இந்த அரசுக்கு முடிவுகட்டுவோம் என ஆக்ரோஷமாக பேசியுள்ளார் புரட்சிப்புயல்.

மதுரை, திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர் சரவணனை ஆதரித்து, மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில்  புரட்சிப்புயல் வைகோ ஆக்ரோஷமாக  பேசினார்.

அப்போது அவர் பேசுகையில் 23ம் தேதி வாக்குப்பதிவு எண்ணப்பட்ட பிறகு இவர் உங்களுடைய சட்டமன்ற உறுப்பினர். திருப்பரங்குன்றம் குமரனின் படை வீடுகளில் ஒன்று, ஆனால், வரும் இடைத்தேர்தல் முடிவுக்கு பின் இது திமுகவின் படைவீடாக மாறிவிடும் என தனது பேச்சைத் தொடங்கினார்.

அடுத்ததாக, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அங்கீகாரம் செய்து கட்சியின் பொதுச் செயலாளர் கையெழுத்திட வேண்டும். ஆனால் கைரேகை வைக்க சட்டத்தில் இடம் உள்ளதா? என தெரியவில்லை. ஆனால், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் போஸ் வேட்பு மனுவில் ஜெயலலிதாவின் கைரேகை முறைகேடானது என வழக்கு போட்டு, நீதியை நிலைநாட்ட செய்ய போராடியவர் நம்ம வேட்பாளர் சரவணன் எனப் பேசினார்.

தொடர்ந்துப் பேசிய அவர்;  தமிழகத்தில் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நிலையில், வட மாநிலத்தை சேர்ந்த பல 1000 இளைஞர்கள் இரயில்வே, அஞ்சலகத் துறை என பல பணிகளில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். அதே போல் தமிழகத்திற்கு வர வேண்டிய பல தொழிற்சாலைகள் நாட்டில் பல மாநிலங்களுக்கு சென்றுள்ளது. தற்போது ஊழல் ஆட்சியாக எடப்பாடி அரசு உள்ளது.  இது மோடிக்கு காவடி தூக்கும் அரசாக மாறி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய 13 பேரை ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டு காவு வாங்கிய இந்த அரசுக்கு முடிவுகட்டுவோம் என ஆக்ரோஷமாக பேசியுள்ளார் புரட்சிப்புயல்.