தமிழக அரசு காவல்துறையை மிகத் தவறாக பயன்படுத்தி அடக்குமுறையை கையாள்வதாக மதிமுக பொது செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

மதிமுக பொது செயலாளர் வைகோ, நெல்லையில், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கதிராமங்கலம் போராட்டம் நியாயமானது. பேராசிரியர் ஜெயராமன் மீது காவல் துறை பொய் வழக்கு போட்டுள்ளது என்றார். 

மாணவி வளர்மதி உள்ளிட்ட போராடுவோர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்தது கண்டனத்துக்குரியது. ஹைட்ரோ கார்பன், நெடுவாசல் திட்டத்திற்கு போராடுவோர் மீது குண்டர் சட்டம் போடுவதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இவற்றையெல்லாம் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

காவல்துறையை தவறாக பயன்படுத்தி அரசு அடக்குமுறையை கையாளுகிறது. தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் என பள்ளிகளில் இருக்கும்போது வந்தே மாதரம் எதற்கு என்றார்.

நீட் குறித்த அரசின் மசோதா பற்றி மத்திய அமைச்சர் நிர்மலா சீராமனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார். அவரின் பதில் அகந்தையும் ஆணவமும் கொண்ட பதில் என்று வைகோ கூறியுள்ளார்.