Asianet News TamilAsianet News Tamil

அண்ணனும் தம்பியும் அதிகாரத்திற்கு வந்து இனவெறி ஆட்டம் போடுறாங்க..! கொந்தளிக்கும் வைகோ..!

பத்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் மீது போர் தொடுத்து, இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த அண்ணனும் தம்பியும் இன்று இலங்கையில் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துவிட்டனர். ஈழத் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலைகளுக்கு பன்னாட்டு விசாரணைக்கு இடம் தர மாட்டோம்; உள்நாட்டு விசாரணையும் கிடையாது என்று இருவரும் கூறி வருகின்றனர்.

vaiko condemns srilankan government
Author
Vellore, First Published Mar 1, 2020, 10:53 AM IST

ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என்றும் அதற்கு  ஐ.நா.மன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இலங்கையில் ஈழத்தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட போர் மற்றும் இனப்படுகொலை குறித்து, பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், 2015 செப்டம்பரில் ஐ.நா. பொதுப் பேரவை தீர்மானம் தொடர்பான அறிக்கை வெளியானது. அதன்பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் 30/1, நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தில், “இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மனித உரிமைகள் மீறல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்; அதற்கு இலங்கை அரசும் பொறுப்பு ஏற்க வேண்டும்; நல்லிணக்கம் உருவாக்கப்பட வேண்டும்; இவற்றை இலங்கை அரசு கட்டாயமாக செயல்படுத்த வேண்டும்” என்று ஐ.நா. மனித உரிமைப் பேரவை வலியுறுத்தியது. ஆனால் இலங்கையில் மைத்திரிபால சிறிசேனா அரசு, ஐ.நா. மனித உரிமைகள் தீர்மானத்தின் படி, போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தவோ, பொறுப்பு ஏற்கவோ ஒன்றரை ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மேலும் 2 ஆண்டுகள் காலக்கெடு நீட்டிப்பு தேவை என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது ஆண்டுக் கூட்டத்தில் கேட்டுக்கொண்டது.

vaiko condemns srilankan government

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால நீட்டிப்பு வழங்கி, தீர்மானம் 40/1 நிறைவேற்றியது. ஈழத்தில் இலட்சக்கணக்கான தமிழர்களை ஈவு இரக்கம் இன்றிக் கொன்று குவிப்பதற்கு, பின்னணியில் திட்டம் வகுத்துக் கொடுத்த கோத்தபாய இராஜபக்சே, கடந்த ஆண்டு இலங்கை அதிபராக பொறுப்பு ஏற்றார். பன்னாட்டு நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய கொலைகாரன், கொடியவன் மகிந்த இராஜபக்சேவை அந்நாட்டுப் பிரதமராக நியமனம் செய்தார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் மீது போர் தொடுத்து, இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த அண்ணனும் தம்பியும் இன்று இலங்கையில் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துவிட்டனர். ஈழத் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலைகளுக்கு பன்னாட்டு விசாரணைக்கு இடம் தர மாட்டோம்; உள்நாட்டு விசாரணையும் கிடையாது என்று இருவரும் கூறி வருகின்றனர்.

vaiko condemns srilankan government

ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில், இலங்கை அரசு சார்பில் பங்கு ஏற்ற இலங்கை வெளிஉறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா, ஐ.நா. பேரவை நிறைவேற்றிய தீர்மானங்கள் 30/1, 40/1 ஆகியவற்றில் இருந்து இலங்கை அரசு விலகுவதாகவும், இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச் சாட்டுகள் மீது, உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அமைப்போம் என்றும் கூறி இருக்கிறார். இலங்கை அரசின் நிலைப்பாட்டைக் கடுமையாகக் கண்டித்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மிச்சேல் பேச்சலெட், “ஏற்கனவே ஒப்புக்கொண்ட விசாரணையைத் தவிர்த்துவிட்டு, மாற்று முயற்சி செய்யது வருத்தம் அளிக்கின்றது; இலங்கை அரசு நியமிக்கும் நீதிபதி விசாரணை ஆணைக் குழுவை ஏற்க முடியாது” என்று கூறி உள்ளார்.

vaiko condemns srilankan government

மேலும், நல்லிணக்க முயற்சிகளில் பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைக் காப்பு விடங்களில் இருந்தும் இலங்கை அரசு பின்வாங்குவது ஆபத்தான நடவடிக்கை; இலங்கை அரசு சிறுபான்மை சமூகங்களின் தேவைகளுக்காகச் செயல்பட வேண்டும்; மக்களின் அன்றாட வாழ்க்கைகூட இலங்கை பாதுகாப்புப் படைப்பிரிவினரால் கண்காணிக்கப்படுவதும், மனித உரிமைகள் காப்பாளர்கள் மற்றும் ஊடகங்களின் செய்தியாளர்கள் தாக்கப்படுவதும், வெறுக்கத்தக்க பேச்சுகள், சிறுபான்மையினரான தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிரான புறக்கணிப்புகள் குறித்தும்’ ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மிச்சேல் பேச்சலெட் கவலை தெரிவித்து உள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவெறி தாக்குதல்கள் தொடருவதையும், இராஜபக்சே சகோதரர்கள் ஆட்சியின் கொடூரங்கள் மீண்டும் தலைதூக்கி வருவதையும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் உறுதிப்படுத்தி உள்ளது. ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கிடைத்திட, பன்னாட்டு நீதி விசாரணை நடத்த, ஐ.நா.மன்றம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios