Asianet News TamilAsianet News Tamil

8 கோடி தமிழர்கள் இருக்கிறோம்.. துரோகம் செய்யாதீர்கள்..! மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த வைகோ..!

தமிழ் இனத்தைக் கூண்டோடு கரு அறுப்பதே கோத்தபய ராஜபக்சேயின் குறிக்கோள் ஆகும். இவருக்கு, இந்திய அரசு அழைப்பு விடுத்து இருப்பது, தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் துரோகம் ஆகும்.

vaiko condemns central government
Author
Tamil Nadu, First Published Nov 23, 2019, 4:18 PM IST

இலங்கையில் கோத்தபய ராஜபக்சே புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து மஹிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் பாதுகாப்பில் இருப்பார்கள் என்று அதிபர் அறிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கோத்தபய ராஜபக்சவிற்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இதை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

vaiko condemns central government

இலங்கைத் தீவில், ஈழத் தமிழ் இனம், கோரப் படுகொலைக்கு ஆளான பின்னர், மேலும் ஒரு பேரபாயம், இப்போது ஏற்பட்டு விட்டது. மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்தபோது, ராணுவ அமைச்சராக இருந்து, லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த கோத்தபய ராஜபக்சே, இம்முறை குடியரசுத் தலைவர் ஆனதோடு, நான் சிங்களவர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டேன் என பகிரங்கமாகவும், ஆணவத்தோடும் அறிவித்து உள்ளார்.

vaiko condemns central government

பதவி ஏற்ற பின்பு, முதல் வேலையாக, வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழர் வாழும் பகுதிகளில், ஆயுதந் தாங்கிய ராணுவத்தினர், தெருக்களைச் சுற்றிச் சுற்றி வருவார்கள் என்று கட்டளை பிறப்பித்துள்ளார். இனக் கொலைப் போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் மாண்டனர். ஒரு லட்சம் தமிழர்கள் காணாமல் போயினர். 90 ஆயிரம் விதவைகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

vaiko condemns central government

தமிழ் இனத்தைக் கூண்டோடு கரு அறுப்பதே கோத்தபய ராஜபக்சேயின் குறிக்கோள் ஆகும். இவருக்கு, இந்திய அரசு அழைப்பு விடுத்து இருப்பது, தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் துரோகம் ஆகும். எட்டுக்கோடித் தமிழர்கள் இந்திய நாட்டின் குடிமக்கள் ஆக இருக்கின்றோம். எங்களது தொப்புள் கொடி உறவுகள் ஆகிய ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்திய அரசுக்கு இருக்கின்றது. இலங்கை அரசின் அடக்கு முறைகளில் இருந்து ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios