vaiko clinks with followers

கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியை அமைத்து கட்சிகளை ஒருங்கிணைத்து திமுக மற்றும் அதிமுகவை எதிர்த்து தேர்தலை சந்தித்தார் வைகோ. மக்கள் நல கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சித் தலைவர்களும் சரி, வைகோவும் சரி, அதிமுகவை விமர்சித்ததை விட திமுகவைத்தான் கடுமையாக சாடினர்.

ஆனால், மக்கள் நல கூட்டணியின் ஒரு வேட்பாளர் கூட தேர்தலில் வெற்றி பெறவில்லை. மாறாக திமுகவின் ஓட்டுக்களை பிரித்து மீண்டும் அதிமுக ஆட்சிக்கட்டிலில் அமருவதற்கே மக்கள் நலக்கூட்டணிதான் காரணம். இப்படி கடந்த தேர்தலில் திமுகவை கழுவி ஊற்றிய வைகோ, தற்போது திமுகவுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார்.

ஜனநாயக விரோத சக்திகளை எதிர்க்க, திமுகவுடன் கூட்டணி சேர வேண்டியது காலத்தின் கட்டாயம் என கூறி திமுகவுடன் கூட்டணி சேர்ந்த வைகோ, ஸ்டாலினை முதல்வர் இருக்கையில் இருத்தாமல் ஓயமாட்டேன் என கூறிவருகிறார்.

வைகோ இப்படி கூறிவரும் நிலையில், சென்னை பாலவாக்கத்தில் திருமண விழாவில் கலந்துகொள்ள சென்ற வைகோவை தொண்டர்கள் வரவேற்றனர். அப்போது ஒருவர், வருங்கால முதல்வரே என வைகோவை புகழ்ந்து கூச்சலிட்டார். அவரிடம், சிரித்துக்கொண்டே.. ஏன் கூட்டணியில் இருப்பது பிடிக்கவில்லையா? என வைகோ நகைச்சுவையாக கேட்டார். இதையடுத்து சுற்றியிருந்தவர்கள் கலகலவென சிரித்தனர்.