எப்பாடு பட்டாவது பதவியை காப்பாற்றிக்கொள்வதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு, அரசியல் சட்ட நெறிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டது என வைகோ கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் தினகரன் ஆதரவாளர்களாக செயல்பட்டுவருகின்றனர். இந்த நிலையில் சபாநாயகர் தனபாலை சந்தித்த கொறடா ராஜேந்திரன், “கட்சிக்கு எதிராக செயல்படும் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனு அளித்தார். ஆனால் தாங்கள் அதிமுகவுக்கு எதிராக செயல்படவில்லை என்று மூவரும் விளக்கம் அளித்திருந்திருக்கிறார்கள். கொறடாவின் கோரிக்கையை ஏற்று சபாநாயகர் மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சித் தாவல் சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க அரசியல் சட்டத்தில் இடம் இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி அரசு பதவியில் நீடிப்பதற்காகவே பேரவைத் தலைவரிடம் ஆளும் கட்சி கொறடா புகார் செய்து இருக்கிறார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கப் போவது உறுதி ஆகிவிட்டது. எனவே எப்பாடு பட்டாவது பதவியை காப்பாற்றிக்கொள்வதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு, அரசியல் சட்ட நெறிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, மேலும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியைப் பறிக்கத் துடிக்கின்றது” என்று விமர்சித்துள்ளார்.

மேலும், “ஆளும் கட்சியின் அரசியல் நோக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் ஜனநாயகம் புதை குழிக்குப் போய்விடும் என்பதை உணர்ந்து, மூன்று சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கக் கோரிக்கையை ஏற்காமல் புறந்தள்ள வேண்டும்” என்று சபாநாயகருக்கு வலியுறுத்தியுள்ளார்.