சண்டையை மூட்டிவிட்ட வன்னி அரசு!! 30 லட்சம் மேட்டரை அம்பலமாக்கிய வைகோ!! அசிங்கப்பட்டு கப்சிப் ஆன திருமா...

https://static.asianetnews.com/images/authors/ea14f421-6212-5fd4-a5ec-f2773be89cf5.jpg
First Published 6, Dec 2018, 3:11 PM IST
Vaiko and VCK Vanni arasu clash
Highlights

வைகோ தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்ததால் கோபத்தில் தனது முகநூலில் பதிவிட்ட வன்னியரசு தனது தலைவர் திருமாவையும் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்த்துள்ளதாக மதிமுக தொண்டர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நெறியாளர் தலித்துகளுக்கு திராவிட அரசியலில் சரியான அதிகாரப்பகிர்வு கிடைத்துள்ளதா என்ற கேள்வியை முன் வைத்தார். இதனால் கோபமடைந்த வைகோ, எங்கள் வீட்டில் தலித்துகள் வேலை பார்க்கிறார்கள். அவர்களோடு நான் சரிசமமாக பழகுகிறேன் என்று டி.வி மைக்கை தனது சட்டையில் இருந்து கழற்றி வீசிவிட்டு எழுந்து சென்றார். இது பரபரப்பாக பேசப்பட்டது. இது தொடர்பாக திருமாவளவனின் மனசாட்சியாக சொல்லப்படுபவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைச் செயலாளருமான வன்னியரசு தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை இட்டார்.

அதில் வன்னியரசு, ‘கடந்த இரு நாள்களாக சரியான தூக்கமில்லை. நான் பெரிதும் நேசிக்கக்கூடிய தலைவர் அவர். அவர் இப்படிப் பேசியிருக்கக் கூடாது என்று மனம் வேதனை கொள்கிறது. அந்தத் தலைவர் வைகோதான்.  என்னுடைய தலைவர் திருமாவளவனை எப்படி மதிக்கிறேனோ அப்படித்தான், வைகோ மீதான மதிப்பீடும். நான் மட்டுமல்ல விடுதலைச் சிறுத்தைகளில் பெரும்பான்மையோர் அப்படித்தான். அந்தளவுக்கு வைகோ மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால், கடந்த இரு நாள்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் அவரின் நேர்காணலைப் பார்த்தேன்.

திராவிட இயக்கம் தலித்துகளுக்கான அதிகாரப்பகிர்வை சரியாகத் தந்துள்ளதா என்னும் நியாயமான கேள்வியை முன்வைத்தார். அதற்கு மிகச் சிறப்பாக, பொறுப்பாக நிறைய பதில் அளித்திருக்கலாம். அதற்கான காரணங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், வைகோ அதற்குப் பதில் அளிக்காமல், “தலித்துகளுக்கு எதிராக என்னைக் காட்ட முயற்சி செய்கிறீர்களா? எங்கள் வீட்டில் வேலை பார்க்கிறவர்கள் தலித்துகள்தான்” என்று சொல்கிறார்.

இந்த உளவியலை ஓர் ஆதிக்க உளவியலாகப் பார்க்கிறோம். பண்ணை அடிமை உளவியலாக, நிலப்பிரபுத்துவ உளவியலாகத்தான் பார்க்கிறோம். தலித்துகள் அதிகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பினாலே அதற்கு பதில் சொல்லக்கூட மறுப்பது எந்தவிதமான பார்வை? பதற்றமடைவது, கோபமடைவது எதைக்காட்டுகிறது?

தமிழக அரசியலில் நீண்டகால அனுபவம் உள்ளவர் வைகோ. சமூக நீதிக்கோட்பாடு, பகுத்தறிவு, தந்தை பெரியார் என்று பயணப்பட்டுக்கொண்டிருப்பவர். சமூக மாற்றத்தை விரும்புபவர்தான்.

தலித்துகள் விடுதலை குறித்த அக்கறை உள்ளவர்தான். ஆனால், எங்கள் வீட்டில் தலித்துகள் வேலை பார்க்கிறார்கள் என்று சொல்வதற்கும் அதிகாரப்பகிர்வுக்கும் ஏதாவது ‘சம்பந்தம்’ இருக்கிறதா? இடைநிலை சாதிகளுக்கு அதிகாரம் வந்ததைப்போல தலித்துகளுக்கு வந்ததா? என்ற கேள்வி மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரிடத்திலிருந்தும் பீறிடும் கேள்விகள்.

அந்த நடப்பு யதார்த்தத்தைப் புரிந்துகொண்டுதான் பயணப்பட வேண்டிய தேவை இருக்கிறது. அதிகாரப் பகிர்வு கடைநிலை மக்களுக்கும் கிடைக்கும் வரை இன்னும் களமாட வேண்டிய தேவையிருக்கிறது. இடைநிலை சாதிகளிடம் ஆட்கொண்டுள்ள சனாதன – சாதிய சிந்தனைகளை களைந்து, சமத்துவத்துக்கான சிந்தனைகளைப் பரப்ப வேண்டிய பணிகளையும் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.

அந்த வகையில், கடைசி மனிதனுக்கான ஜனநாயகத்துக்காகவும் எளிய மக்களுக்கான அதிகாரத்துக்காகவும் களமாட வேண்டிய தேவையிருக்கிறது. அதுவரை ஊடகங்கள் மட்டுமல்ல, எல்லோருமே கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். கோபமோ பதற்றமோ அடைந்தால் சந்தேகம்தான் கூடுதலாக எழும்!’ என குறிப்பிட்டார் வன்னியரசு.

இதனையடுத்து மதிமுக நிர்வாகிகளிடம் பேசிய வைகோ, திருமாவளவனுக்கு தேர்தல் செலவுக்காக ரூ.30 லட்சம் கொடுத்தேன். என்னைப் பார்த்து இப்படி பேசியது வருத்தமளிக்கிறது என பேசினார். இதற்கிடையே வன்னி அரசின் பதிவுக்கு எதிர்ப்பு வந்ததால் அவர் தனது பதிவை நீக்கிவிட்டார்.

வைகோ குறித்து வன்னியரசு வெளியிட்ட இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வைகோவிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘வன்னியரசுவை இப்படி பதிவு செய்ய வைத்தது யார்?’ என கேள்வி எழுப்பினார். இதற்கு  திருமாவளவன் பதில் கூறுகையில், இது, என்மீது உள்ள கோபமா அல்லது வன்னியரசின் பதிவுக்கு விடையா என்று தெரியவில்லை' என கேள்வி எழுப்பினார். வன்னியரசுவை தான் கண்டித்ததாகவும், அதனால் தனது பதிவை வன்னியரசு நீக்கியதாகவும் திருமா குறிப்பிட்டார்.

loader