அரசியல்வாதிகளின் மீது எப்போதும் ஊடக வெளிச்சம் விழுந்து கொண்டே  இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் மக்கள் அவர்களை மறந்து விடுவார்கள்.

பெரிய கட்சிகளின் நிலையே அப்படி என்றால், சிறிய கட்சிகள், குறிப்பாக தனி நபர் முன்னேற்ற கட்சிகளின் நிலையை கேட்கவே வேண்டாம்.

மாணவர்களின்  ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு, திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளின் ஸ்டண்டுகளே மக்கள் மத்தியில் எடுபடாமல் போய்விடுகிறது.

அப்படி இருக்கையில், சிறிய கட்சி நடத்தும்  வைகோவும் , திருமாவளவனும் என்ன செய்வார்கள்? 

அதனால்தான், கேபிள் டி.வி தொடங்கி, எந்த ஊடகம் கண்ணில் தென்பட்டாலும், கண்ணை மூடிக்கொண்டு  கருத்து சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள். 

இந்நிலையில், வந்தாலும் வந்தது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்.

அதில், சசிகலா-ஓ.பி.எஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிகளுக்கு மத்தியில், திமுகவே லேசாகத்தான் வெளியில் தெரிகிறது.

அதனால், பா.ம.க, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் அங்கு சீனில் இல்லாததால், வெளியில் தெரியாமலே போய்விட்டன.

அதனால் என்ன செய்வது? என்று யோசித்த வைகோ, திருமாவளவன், வேல்முருகன் போன்றவர்கள், நடிகர் ரஜினி காந்தை, இலங்கை செல்ல வேண்டாம் என அறிக்கைவிட்டு தங்கள் இருப்பை காட்டிக்கொண்டனர்.

அவரும், வேறு சில காரணங்களால் பயணத்தை ரத்து செய்துவிட்டு, அறிக்கைவிட்ட அன்பர்களுக்கும் நன்றி சொல்லிவிட்டு, இதை அரசியல் ஆக்க வேண்டாம் என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார்.

அதனால், மீடியா வெளிச்சம் அத்துடன் முடிந்து விடுமோ? என்று பயந்த   திருமாவும், வைகோவும் தங்களுக்குள்  மாறி, மாறி மீண்டும் அறிக்கை விட்டு, அந்த படலத்தை தொடர்ந்து கொண்டு இருக்கின்றனர். 

ரஜினியுடன் பேசியதை அறிக்கையில் தெரிவித்து விளம்பரம் தேட முயற்சிக்கவில்லை என்று வைகோ கூறுகிறார்.

அதே பாணியில், விளம்பரம் தேடுவதற்காக ரஜினியின் இலங்கை பயணத்தை தடுக்கவில்லை என்கிறார் திருமா.

நல்லா பார்த்துக்கோங்க... நாங்களும் அரசியல்வாதிகள்தான்...என்று காட்டிக்கொள்ள, இதுபோல  ஏதாவது சந்தர்ப்பம் வராமலா போய்விடும்? 

அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான், இதுபோன்றவர்களின்  அரசியல்  பயணமும்  தொடர்ந்துகொண்டே இருக்கிறது.