தி.மு.க கூட்டணி கட்சிகளான ம.தி.மு.கவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தி.மு.க சின்னத்தில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. இதனால், தி.மு.க கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தி.மு.க அதன் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளை தங்களது சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று நிர்பந்தித்து வருகிறது. கடந்த தேர்தலிகளிலும் தி.மு.க கூட்டணி கட்சிகளை தங்களது சின்னத்தில் போட்டியிட வைத்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கூட ம.தி.மு.க, தி.மு.கவின் சின்னத்தில் போட்டியிட மறுப்பு தெரிவித்தது. பின்னர், இறுதி நேரத்தில் வேறு வழியின்றி தி.மு.க சின்னத்தில் போட்டியிட்டது. அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் விழுப்புரத்தில் தி.மு.க சின்னத்தில் போட்டியிட்டது, அதே சமயம் வி.சி.க தலைவர் திருமாவளவன் சிதம்பரத்தில் தி.மு.கவின் சின்னத்தில் போட்டியிட மறுப்பு தெரிவித்து தனி சின்னத்தில் போட்டியிட்டார். 

இந்நிலையில் , தமிழக சட்ட பேரவை தேர்தலில் தி.மு.க தனது கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தி வருகிறது. இதற்கு ம.தி.மு.கவும் வி.சி.கவும் போர்க்கொடி தூக்கியுள்ளன. கூட்டணி கட்சிகளை தி.மு.க சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று ஐபேக் நிறுனம் அறிவுரை வழங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஐபேக் கொடுத்த அறிவுரையின் பேரில் ஹதராபாத்தில் இருக்கும் ஓவைசியை சந்தித்து தி.மு.கவின் பொது கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தது, கூட்டணி கட்சிகளான ஐ.யு.எம்.எல் மற்றும் ம.ம.க கட்சிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஐபேக்கின் இந்த திட்டத்திற்கு ம.தி.மு.கவும் வி.சிகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐபேக்கின் அறிவுரையால் தி.மு.க கூட்டணி உடையும் நிலையை எட்டியுள்ளது.

"நாங்கள் ஏற்கனவே தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று கூறிவிட்டோம்" என விசிக கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார், மதிமுக தலைவர் வைகோவும் இதே போன்று கருத்து கூறியுள்ளார், ஏற்கனவே இது போன்று பிரச்சனை பல முறை வந்துள்ளதால், திமுக தற்போது கலக்கத்தில் உள்ளது.