மூன்றாவது உலகக் கோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம், ஆமதபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியாவும், ஈரான் அணிகளும் மோதின. இந்த போட்டியில் 38 - 29 என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. 

கபடி போட்டியில் வென்றதை அடுத்து, பிரதமர் நரேந்திரமோடி உட்பட பல்வேறு தரப்பினர், இந்திய கபடி அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், மதிமுக பொது செயலாளர் வைகோ, இந்திய கபடி அணி வீரர்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அதில், கபடி விளையாட்டை உலகிற்குத் தந்த இந்தியா, உலக கோப்பையில் இதுவரை தோற்றதில்லை என்றும், சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது என்றும் கூறியுள்ளார்.

கபடி போட்டியில் உலகக் கோப்பையை வென்று நாட்டிற்கு பெருமையைத் தேடித் தந்த இந்திய கபடி அணி வீரர்களுக்கும், இந்திய அணியில் விளையாடிய தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வீரர் சேரலாதனுக்கும், மதிமுக சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 'சடுகுடு' எனும் பெயரில் நடந்துவந்த இந்தக் 'கபடி' விளையாட்டை பெருமளவில் ஊக்குவித்தவர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்கள்தான் என்பதை நினைவு கூருவதாகவும் வைகோ அதில் தெரிவித்துள்ளார்.