23 ஆண்டுகளுக்குப் பின் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார். மதிமுகவில் வைகோவின் மீது அளவு கடந்த பாசமும் பற்றுக் கொண்டவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள வீரியன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முத்துலெட்சுமி . கணவரை இழந்த இவர் டீக்கடை நடத்தி வருகிறார். வைகோவின் மீது பற்று கொண்ட இவர் இன்று  காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வைகோ மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பதை கொண்டாடும் விதமாக வாடிக்கையாளர்களுக்கு 1 ரூபாய்க்கு டீ, காபி வழங்கினார். 

இதேபோல பேராவூரணி அருகில் உள்ள கொன்றைக்காடு கிராமத்தைச் சேர்ந்த டீ க்கடை முத்தையன் என்ற மதிமுக தொண்டர் இன்று , ஒரு ரூபாயக்கு டீ, காபி, வடை ஆகியவற்றை வழங்கினார். 

இதனிடையே வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆனதை முன்னிட்டு கரூரை சேர்ந்த ம.தி.மு.க. தொண்டர் ஒருவர் ஒரு ரூபாய்க்கு வடையும், ஒரு ரூபாய்க்கு டீயும் வழங்கி வாடிக்கையாளர்களுக்கு ஆச்சரியம் கொடுத்தார். 

குளித்தலை பெரிய பாலம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வரும் ரகுபதி, ம.தி.மு.க. நிர்வாகியாக உள்ளார். இன்று வைகோ எம்.பியாக பதவியேற்றுக் கொண்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், தமது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்த திட்டமிட்டார். இதற்காக ஒரு ரூபாய்க்கு வடை மற்றும் ஒரு ரூபாய்க்கு டீ  வழங்கினார்.