ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் சசிகலா குடும்பத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பதன் பின்னணியில் யாரோ இருக்கிறார்கள் என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.

டி.டி.வி தினகரன் துணை பொதுச்செயலாளராக இன்று பொறுப்பேற்றுள்ள நிலையில், சசிகலாவின் குடும்பத்திற்கு எதிராக ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் செய்தியாளர்களுக்கு தொலைபேசியில் பேட்டி அளித்தார். அப்போது டி.டி.வி தினகரனுக்கு தலைமையேற்க தகுதியில்லை எனவும் அண்ணன் ஓ.பி.எஸ்சுக்கே மூன்று பங்கு தகுதி இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஜெயலலிதா மரணத்தில் விசாரணை கமிஷன் தேவை எனவும், தனது அத்தைக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தையும் தாமே கட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ் அண்ணன் எங்கள் குடும்பத்தில் ஒருவர், அவரை யாரும் சமாதானபடுத்த தேவையில்லை, அவர் தானே வந்து எங்களுடன் இணைவார் என நம்பிக்கை தெரிவித்தார். சசிகலா அத்தையை ஆதரிப்பேன் ஆனால் அவர்கள் குடும்பத்தின் தலைமையை ஆதரிக்க மாட்டேன்.

இவ்வாறு பல கருத்துகளை தீபக் முன் வைத்தார்.

தீபக்கின் இத்தகைய கருத்துகளுக்கு பதிலளித்து பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன், கூறியதாவது:

தற்போது எழுந்துள்ள பிரச்சனைகள் குறித்து தீபக்கிடம் பேசி தீர்க்கப்படும்.

தீபக்கை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள். அவரின் கருத்து முன்னுக்கு பின் முரண்பாடாக உள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் அதிமுகவிற்கு எவ்வித சந்தேகமும் இல்லை. போயஸ் தோட்டத்திற்கு தீபா உரிமை கொண்டாடுவது பற்றி பிறகு தெரிவிக்கப்படும்.

ஜெயலலிதா பிறந்தநாள் எழுச்சியோடு கொண்டாடப்படும் என வைகை செல்வன் தெரிவித்தார்.