அதிமுக பொதுக் குழுவைக் கூட்டி சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விரைவில் நீக்குவோம் என மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.

அதிமுகவின்  இரு அணிகளும் இணைந்ததையடுத்து, இபிஎஸ்ம், ஓபிஎஸ்ம், சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் குடும்பத்தை முற்றிலும் ஒதுக்கி வருகின்றனர்.

இரு அணிகள்  இணைப்பின்  போது, மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்படுவார் என அறிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள், அவருக்கு எதிராக கடுமையாக பேசி வருகின்றனர். இதையடுத்து வைத்திலிங்கத்தை, கட்சியில் இருந்து நீக்கி டி.டி.வி.தினகரன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், அதிமுக பொதுக் குழுவைக் கூட்டி சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விரைவில் நீக்குவோம் என தெரிவித்தார்.

90 % பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களிடம்தான் உள்ளனர் என்றும், அவர்கள் அனைவருமே சசிகலாவை நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

தற்போது  19 எம்எல்ஏக்களை தினகரன் தரப்பினர் வலுக்கட்டாயமாக சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டிய வைத்திலிங்கம் அவர்களை விடுவிக்க  கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.