உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த வியாழக்கிழமையன்று உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில், பாலியல் வழக்கில் பெயிலில் வெளியே வந்த 2 குற்றவாளிகள் உள்பட 5 பேர் அந்த பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டு தப்பியோடியது. 

 உடல் 90 சதவீதம் எரிந்த நிலையில் அந்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் வெள்ளிக்கிழமை இரவு அந்த பெண் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார். 

இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாக்க தவறியதற்காக பா.ஜ.க. தலைமையிலான உத்தர பிரதேச அரசை கலைத்து விட்டு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என சமாஜ்வாடியின் மாநிலங்களவை உறுப்பினர் ராம் கோபால் யாதவ் தெரிவித்தார்.

ராம் கோபால் யாதவ் இது குறித்து  கூறுகையில், உன்னாவில் நடந்ததை காட்டிலும் வேறு என்ன பெரிதாக நடக்க வேண்டும். நாங்கள் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பேசினோம். 90 சதவீதம் உடல் எரிந்த எந்தவொரு நபரும் உயிர் பிழைக்க முடியாது என நான் தெரிவித்தேன்.

 உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான நடைபெறும் குற்ற பட்டியலில் இது மற்றொரு நிகழ்வு. அரசியலமைப்பில் பிரிவு 356 கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆகையால் அரசியலமைப்புப்படி செயல்படாத மாநில அரசை கட்டாயம் கலைக்க வேண்டும் மற்றும் குடியரசு தலைவர் ஆட்சியை அங்கு அமல்படுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்ணையும், குடும்பத்தையும் பாதுகாப்பதில் மாநில அரசு தோல்வி கண்டுள்ளது. மற்ற வழக்குகளிலும் நீதியை உறுதி செய்வதில் அரசு தோல்வி அடைந்து விட்டது. இதுவரை எந்தவொரு வழக்குகளிலும் குற்றவாளிக்கு அச்சமூட்டும் வகையில் தண்டனைகள் வழங்கப்படவில்லை. மாநில அரசுக்கு நெருக்கமாக இருப்பதால் பல குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிவிடுகிறார்கள். இந்த அரசாங்கம் இல்லையென்றால் இந்த போன்ற சம்பவங்கள் நடந்து இருக்காது என தெரிவித்தார்.