Uttra pradesh BJP MLA rape small girl

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வல்லுறவுக் கொடுமைகள் என்றாலே, பாஜக-வினர் தான் குற்றவாளிகளாக பெரும்பாலும் இருப்பார்கள் என்பது எழுதப்படாத விதியாகி விட்டது. அந்த அடிப்படையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மேலும் ஒருபாஜக எம்எல்ஏ பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப்சிங் செங்கார் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினார். பிரச்சனை வெளியே தெரியாமல் இருக்க, சிறுமியின் குடும்பத்தினரை மிரட்டியதுடன், ஆட்களை அனுப்பி தாக்குதலும் நடத்தினார்.

இதில் சிறுமியின் தந்தை மரணமடைந்தார். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், நீதிமன்றம் தலையிட்டு, குல்தீப் சிங் செங்காரை கைது செய்ய வைத்தது.

சிபிஐ விசாரணையில், குல்தீப் மீதான வல்லுறவுக் குற்றச்சாட்டு தற்போது உறுதியும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான், உத்தரப்பிரதேச மாநிலம் பிஸ்ஸாலி தொகுதி பாஜக எம்எல்ஏ குஷாகரா சாகரும், பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். குஷாரா சாகர் எம்எல்ஏ, தனது வீட்டில் வேலைசெய்து வந்த ஒருவரின் மகளை, திருமணம் செய்து கொள்வதாக கூறி, சிறுமியென்றும் பாராமல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி இருக்கிறார்.

ஆனால், குஷாரா சாகருக்கும், வேறொரு பெண்ணுக்கும் ஜூன் 17-ஆம் தேதி திருமணம் நிச்சயமான நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி காவல்நிலையத்தில் புகார் அளித் துள்ளார்.‘

பாஜக எம்எல்ஏ-வான சாகர், என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினார்; அவரது உறவினர்கள், திருமணம் செய்து வைப்பதாக முதலில் கூறினார்கள்; ஆனால், தற்போது 20 லட்சம் ரூபாய் பணம் தருகிறோம், ஒதுங்கிக் கொள் என்று என்னை மிரட்டுகிறார்கள்’ என்று சிறுமி கூறியுள்ளார்.

குஷாரா சாகரால், சமுதாயத்தில் தான் கேலிக்குரிய நபராகி விட்டதாகவும், தனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் சிறுமி அழுது கதறியுள்ளார்.

குஷாரா சாகரின் தந்தை யோகேந்திர சாகர். இவரும் முன்பு எம்எல்ஏ-வாக இருந்தவர். தனது மகனைக் காப்பாற்றுவதற்காக, அவர் தான் சிறுமியை நேரடியாகவே மிரட்டியுள்ளார். இது தொடர்பாக போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால்,குஷாரா சாகரை இன்னும் கைது செய்யவில்லை