uttar pradesh cm sealing meat shops
உத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோதமாக செயல்படும் இறைச்சி கடைகளுக்கு சீல் வைக்கும்நடவடிக்கையை முதல்வர் ஆதித்யநாத் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், பசுமாடுகள் கடத்தலையும் முழுமையாக தடை செய்துள்ளது.
முதல்வர் ஆதித்யநாத்
உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி 15 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியைப் பிடித்தது. கோரக்பூர் மடாதிபதியும், எம்.பி.யுமான யோகிஆதித்யநாத் முதல்வராக பதவி ஏற்றார்.
தேர்தல் வாக்குறுதி
தேர்தல் நேரத்தில் பாரதிய ஜனதா அளித்த வாக்குறுதிகளை முதல்வர் ஆதித்யநாத் அரசு தீவிரமாக நிறைவேற்றி வருகிறது. அதில் முக்கியமானது, பசுக் கடத்தலைத் தடுப்பது, சட்டவிரோத இறைச்சி வெட்டும் கூடங்களை ஒழிப்பது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது உள்ளிட்டவையாகும். இந்த வாக்குறுதிக்கு முன்னுரிமை கொடுத்து பாரதிய ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது.

கிடப்பில் கிடந்த சட்டம்
சமாஜ்வாதி கட்சியின் ஆட்சிக்காலத்தில் செயல்பாட்டில் இல்லாமல் இருந்த, 1959-உத்தரப்பிரதேசம் மாநகராட்சி சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த தொடங்கி இருக்கிறது. இந்த சட்டத்தின்படி, மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு சுகாதாரமான முறையில், புதியதாக வெட்டப்பட்ட இறைச்சிகளை அளிப்பது உறுதி செய்யப்பட வேண்டும். மேலும், சட்டவிரோதமாக செயல்படும் இறைச்சிக்கூடங்களை தடுக்கவேண்டும், கால்நடைகள் கடத்தலையும் தடுக்க வேண்டும்.
சீல் வைப்பு தீவிரம்
இந்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தியுள்ள ஆதித்யநாத் அரசு, மாநிலத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட கடைகளை சீல் வைக்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது.
ஆதித்யநாத் முதல்வராக பதவி ஏற்று ஒருவாரம் நிறைவடைவதற்கு ஏறக்குறைய 100-க்கும்மேற்பட்ட சட்டவிரோத இறைச்சிக் கூடங்கள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. அங்கீகாரம் இல்லாத 100-க்கும் மேற்பட்ட இறைச்சிக்கடைகள் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளன.
இதில் லக்னோ நகரில் மட்டும் ஆயிரத்துக்கு மேற்பட்ட சட்டவிரோத இறைச்சிக்கடைகள் உள்ளன. இதை மூடக்கோரி நோட்டீஸ் அளித்துள்ளது மாநில அரசு.

இறைச்சி சப்ளையர்கள் போராட்டம்
உத்தரப்பிரதேச அரசு இறைச்சிக்கடைகளுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கையைக் கண்டித்து ஆடு, மாடுகள் சப்ளை செய்யும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளனர். லக்னோ முர்கா மண்டி சமிதி(எல்.எம்.எம்.எஸ்.), லக்னோமுர்கா பக்ரா வியாபாரி கல்யான் சமிதி(எல்.எம்.பி.வி.கே.எஸ்.) ஆகிய அமைப்புகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.
