கொரோனா ஊரடங்கால் அனைத்து தரப்புகளையும் விட கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது புலம்பெயர் தொழிலாளர்கள். புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு திருப்பியனுப்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. பேருந்துகள் மற்றும் ரயில்களின் மூலமாக அவர்கள் திருப்பியனுப்பப்படுகின்றனர். ஆனாலும் சில புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களுக்கான முறை வருவதற்கு முன்பாகவே அவசரப்பட்டு சொந்த ஊர்களை நோக்கி நடையை கட்டுகின்றனர். 

புலம்பெயர் தொழிலாளர்களை அடிப்படையாக வைத்து மத்திய அரசை எதிர்த்தும், பாஜக  மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்துவருகின்றன. இதில் நடந்துள்ள உச்சபட்ச அரசியல் உத்தரப்பிரதேசத்தில் தான். 

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசை எதிர்த்து அம்மாநிலத்தில் வலுவான மற்றும் நல்ல ஓட்டு வங்கிகளை பெற்றுள்ள பிரதான எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட பெரியளவில் அரசியல் செய்யவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், அக்கட்சியின் உத்தர பிரதேச பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி தான் செம அரசியல் செய்துவருகிறார். 

2022ல் உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், இப்போதே ஆளும் பாஜகவை எதிர்த்து தீவிர அரசியல் செய்ய தொடங்கிவிட்டார் பிரியங்கா காந்தி. அதுவும் கொரோனா சூழலை பயன்படுத்த முடிவு செய்த காங்கிரஸ், இந்த நெருக்கடியான சூழலில் ஆளுங்கட்சியை எதிர்த்து அரசியல் செய்யாமல், அவர்களுடன் இணைந்து மக்கள் பணியாற்றவும் ஆளுங்கட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்கவும் தயார் என்கிற ரீதியில், மக்கள் மத்தியில் நற்பெயரையும் ஆதரவையும் பெற முயற்சிக்கிறது காங்கிரஸ். 

மாயாவதியும், அகிலேஷ் யாதவும் அமைதியாக இருக்கும் நிலையில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, கொரோனா சூழலை எதிர்கொள்வது குறித்து தொடர் கடிதங்களை எழுதிவருகிறார் பிரியங்கா காந்தி. 

அதன் ஒருபகுதியாக, உத்தர பிரதேசத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களை உத்தர பிரதேசத்திற்கு அழைத்துவர காங்கிரஸ் சார்பில் 1000 பேருந்துகளை ஏற்பாடு செய்துதர தயார் என பிரியங்கா காந்தி, யோகி ஆதித்யநாத்துக்கு கடந்த 16ம் தேதி கடிதம் எழுதினார். 

புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக காங்கிரஸ் கட்சியின் அந்த கோரிக்கையை ஏற்ற யோகி ஆதித்யநாத், புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து வர காங்கிரஸ் ஏற்பாடு செய்த 1000 பேருந்துகள் மற்றும் ஓட்டுநர்களின் விவரங்களை கோரினார். 

இதையடுத்து அந்த விவரங்கள் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதில் தான் சிக்கல். காங்கிரஸ் கட்சி அனுப்பிவைத்த விவரத்தில் இடம்பெற்றிருந்த பதிவு எண்கள், பேருந்துகளுடையது அல்ல; அவையனைத்தும் இருசக்கரம், ஆட்டோ, கார் ஆகிய வாகனங்களின் பதிவு எண்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்வதாக கூறிய பேருந்துகளுக்கு யோகி ஆதித்யநாத் அனுமதியளிக்கவில்லை.

ஆனால், அதை மறுத்த காங்கிரஸ் கட்சியும் பிரியங்கா காந்தியும் அந்த பேருந்துகளை நேரில் பார்வையிட்டு உறுதி செய்யுமாறு வலியுறுத்தினர். காங்கிரஸ் கட்சி அனுப்பிய 1000 பேருந்துகளின் விவரங்கள் போலியாக இருந்ததால், அவற்றிற்கு யோகி அனுமதியளிக்காத நிலையில், ராஜஸ்தான் - உத்தர பிரதேச எல்லையில், உத்தர பிரதேச போலீஸாரால் அந்த பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டதாக ராஜஸ்தான் போலீஸார் தெரிவித்தனர். 

இதையடுத்து, அந்த பேருந்துகளை அனுமதிக்குமாறு யோகி ஆதித்யநாத்துக்கு வேண்டுகோள் விடுத்து சமூக வலைதளத்தில் பேசிய பிரியங்கா காந்தி, இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள் வெறும் இந்தியர்கள் மட்டுமல்ல; அவர்கள் இந்தியாவின் முதுகெலும்பு. அவர்களின் வியர்வையிலும் ரத்தத்திலும் தான் இந்தியா இயங்குகிறது. எனவே அந்த பேருந்துகளை அனுமதிக்க வேண்டும். அதில் பாஜக கொடிகளை ஒட்டிக்கொண்டாலும் பரவாயில்லை. அரசே ஏற்பாடு செய்தது போன்ற தோற்றத்தை உருவாக்கினாலும் பரவாயில்லை. ஆனால் அந்த பேருந்துகளை அனுமதிக்க வேண்டும் என்று பிரியங்கா காந்தி உணர்ச்சி பொங்க பேசினார். 

காங்கிரஸ் ஏற்பாடு செய்வதாக கூறிய 1000 பேருந்துகளை இயக்குவதற்கு யோகி ஆதித்யநாத் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி அனுப்பிய வாகன பதிவு எண்கள் எதுவுமே பேருந்துடையது அல்ல. அதை கண்டுபிடித்த பின்னர்தான், யோகி அதற்கு அனுமதியளிக்க மறுத்தார். ஆனால் 2022 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து, உத்தர பிரதேசத்தில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் காங்கிரஸ் கட்சி பஸ் பாலிடிக்ஸை கையில் எடுத்திருக்கிறதே தவிர, புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் மக்கள் மீதான உண்மையான அக்கறை காரணமாக இருப்பதாக தெரியவில்லை. இதற்கு அவர்களது மனசாட்சிதான் பதில் சொல்ல வேண்டும்.